இ
யற்கையின் தனித்தன்மை என்பது பல்வேறு கூறுகளின் ஒருங்கிணைந்த இயக்கம். எந்த உயிரினமும் தனித்து இயங்குவது சாத்தியமல்ல. சார்புநிலைதான் சூழலியலின் அச்சாணி. திணைச் சமூகங்களிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம்.
துறைவர் சமூகங்களில் பலதரப்பட்ட தொழில் குழுக்கள் வாழ்கின்றன. எல்லோரும் கடல் புகுவதில்லை. சில இனக்குழுக்கள் கரைக் கடலைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவார்கள். கடியப்பட்டணம் போன்ற இடங்களில் மூங்கில் பொறிகளை கரையருகே உள்ள பாறைகளுக்கிடையே அமிழ்த்தி வைத்துவிட்டு , மறுநாள் அதை எடுத்து சிக்குண்ட மீன்களை அறுவடை செய்துவரும் குளியாளிகளும் உள்ளனர். மீன்பிடித்தல் தவிர்த்த பிற தொழில்களில் ஈடுபடும் தொழில் குழுக்களில் முக்கியமானவர்கள் `குளியாளிகள்’.
குளியாளிகள், இரண்டு வகையான தொழில்களில் ஈடுபடுகின்றனர். கடற்கரைக் கிராமம்தோறும் கடலில் மூச்சடக்கி, மூழ்கி தவறிப்போன, பாறைகளில் சிக்கிக் கொண்ட வலைகளை மீட்பவர்கள் ஒருவகையினர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மீனவர்களுடன் இயல்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள். கடலில் இறந்துபோனவர்களின் சடசடலங்களைத்லங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
இரண்டாவது வகையினர் தொழில்முறை குளியாளிகள். முத்துக் குளித்தலிலும் சங்கு குளித்தலிலும் ஈடுபடுவது இவர்கள் வேலை. முத்துச் சலாபம், சங்குச் சலாபம் என வழங்கப்படும் இந்தத் தொழிலும் ஆபத்து மிகுந்தது. இந்த உயிரினங்கள் கடலின் ஆழங்களில் அதிகமாக வாழும் படுகைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சேகரித்து வருவதற்குப் பயிற்சியும் தனித் திறன்களும் வேண்டும். அறுவடைக்குச் செல்லும் படகின் உரிமையாளர் 'சம்மாட்டி' எனப்படுகிறார். முக்குளித்து முத்துச் சிப்பி, சங்குகளை எடுப்பவர்கள் 'குளியாளிகள்’.
கடலில் மூழ்கி ஆழத்துக்குப் போவது ஒன்றும் அத்தனை எளிதல்ல. உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் சிக்கலும் அதில் உண்டு. நுரையீரல்களால் காற்றைச் சுவாசித்து நிலத்தில் வாழும் உயிரினம் மனிதன். மீன்கள் நீரில் கரைந்திருக்கும் உயிர்வளியை நம்பியிருப்பவை. கடலில் ஒவ்வொரு பத்து மீட்டர் ஆழம் போகும்போது நிலத்தில் காற்றழுத்தத்தின் ஒரு மடங்கு அளவு அழுத்தம் கூடுகிறது. கடலாழம் நுரையீரலில் தங்கியிருக்கும் காற்றைப் பிதுக்கி வெளியேற்ற முயல்கிறது. நிலத்தில் நாம் சுமார் இரண்டு மணித் துளிகள் அசையாமல் மூச்சுப் பிடித்து உட்கார்ந்திருக்கலாம்.
கடலுக்குள் இயங்கியவாறு அதிகபட்சம் ஒரு மணித்துளிதான் தாக்குப்பிடிக்க முடியும். உயிர்வளி உருளையின் உதவியில்லாமல் இந்த ஒரு மணித்துளியைக் கையாளும் திறமைதான் ஒரு குளியாளியை உருவாக்குகிறது. சட்டென்று கீழே மூழ்கிச் செல்வதற்கு 10 கிலோ கல் உருளை; நீந்திச் செல்ல உதவியாக கால்களில் துடுப்புத் தட்டு; கடல் நீருக்குள்ளிருக்கும் சங்கு, முத்துச் சிப்பிகளை எளிதாகப் பார்க்க கண்ணாடி, சேகரிக்கும் சங்கு, சிப்பிகளை வைத்துக்கொள்ள ஆச்சா (கவுளிப் பாத்திரம்) இவ்வளவும் ஒரு குளியாளிக்குத் தேவை. கடலில் மூழ்கிச் செல்லும் குளியாளிக்குப் படகில் ஒரு துணையாள் வேண்டும்.
குளியாளி கீழே இறங்கித் தரை தொட்ட பிறகு கல் உருளையைத் துணையாள் மேலே தூக்கிவிடுவார். குளியாளி கயிற்றால் படகோடு பிணைக்கப்பட்டிருப்பார். குளியாளி தன் தேவையைச் சொல்லும் தகவல் பாதை இந்தக் கயிறு. பொதுவாக அக்காள் கணவர் குளியாளி என்றால், மைத்துனர்தான் துணையாள்.. துணையாள் பிடித்திருப்பது வெறும் கயிறு அல்ல, அக்காவின் தாலிக்கயிறு!
(அடுத்த வாரம்: முத்துக் குளித்துறை ஒரு நிலவியல் விபத்து)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com