கடந்த அக்டோபர், 2022இல் தென் அமெரிக்காவின் மத்திய,தென் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியது. இப்பகுதி அண்டார்க்டிகாவுக்கு அருகில் இருந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தியது. இறுதியில் எது நடக்கக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்களோ, அது நடந்துவிட்டது. ஏறக்குறைய ஓராண்டுக்குள் அண்டார்க்டிகாவிலும் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது.
இங்குள்ள பறவைத் தீவு, சாண்ட்விச் தீவுகள், ஃபால்க்லேண்ட் தீவுகள், தெற்கு ஜார்ஜியா போன்ற பகுதிகளில் எச்5என்1 வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாக இருப்பது, புத்தாண்டின் சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. கடற்பறவை இனங்களான பெட்ரெல், ஸ்குவா, ஃபல்மர், வாத்து இனங்களைச் சேர்ந்த சில வகைப் பறவைகள் பறவைக்காய்ச்சலால் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்தன.
இதே பகுதியை வாழிடமாகக் கொண்ட கடல் சிங்கங்களும் அதிக எண்ணிக்கையில் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி பலியாகி வருகின்றன. குறுகியப் பரப்பில் குழுக்களாக, நெருக்கமாக வாழ்ந்துவரும் பென்குவின் களும் பறவைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகலாம் என அஞ்சப்படுகிறது.
எனினும், பென்குயின்கள், அண்டார்க்டிகாவின் உள் பகுதியில் வாழ்வதால், அப்பகுதிக்கு வைரஸ் தொற்று பரவச் சாத்தியமில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இயற்கை தானே பொத்திப் பொத்திப் பாதுகாத்துவந்த ஓர் இன்றியமையாத பகுதி, தனது பாதுகாப்பை இழந்து வருவது வேதனைக்குரியது. - ஆனந்தன்