மயிலுக்கு நீண்ட தோகை அழகு. வண்ணங்கள் தோய்ந்த அந்தத் தோகைக்குத் தனி அழகு தருவது மையத்தில் இடம்பெற்றுள்ள கண். இதே போன்ற கண்ணை இறக்கையில் கொண்ட வண்ணத்துப்பூச்சிக்கு ‘மயில் வசீகரன்’ என்று பெயர்.
ஆங்கிலத்தில் Peacock Pansy, அறிவியல் பெயர் Junonia almanac. தமிழில் Pansy வண்ணத்துப்பூச்சிகள் அனைத்தும் வசீகரன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
மயில் வசீகரனின் பிரகாசமான ஆரஞ்சு நிற இறக்கைகளில் கீழ் இறக்கை ஒவ்வொன்றிலும் பெரிய கண்ணைப் போன்ற ஒரு புள்ளி காணப்படும். மேல் இறக்கை ஒவ்வொன்றிலும் தலா இரண்டு புள்ளிகள் காணப்படும். இறக்கையை விரித்து வைத்து ஓய்வெடுக்கும். அதேபோல இறக்கையை விரித்து சூரிய ஒளியில் வெயில் காயவும் கூடியது. இப்படி விரித்துவைத்தால் இறக்கைகளின் அகலம் 6/6,5 செ.மீ. நீளத்துடன் இருக்கும்.
தாழ்வாகவும் வேகமாகவும் பறக்கக்கூடியது. ஆண் வண்ணத்துப்பூச்சிகள் குறிப்பிட்ட வாழிட எல்லையைப் பாதுகாக்கும். ஆண்டு முழுவதும் இதைப் பார்க்கலாம்.
காட்டுப்பகுதிகள், திறந்தவெளிகள், தோட்டங்கள், நீர்நிலைப் பகுதிகளிலும், வெயில் படக்கூடிய புல்வெளிகளிலும் பொதுவாகக் காணப்படும். நாடு முழுவதும் தென்படும் இந்த வண்ணத்துப்பூச்சி இந்தியா மட்டுமில்லாமல் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான்வரை பரவிக் காணப்படுகிறது.
இந்த வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள் கனகாம்பரம், நீர்முள்ளி, பொடுதலை போன்ற தாவரங்களை பொதுவாக உணவாகக் கொள்கின்றன.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ப புறத்தோற்றம் மாறுபடக்கூடிய தன்மை (polyphenism) இந்த வண்ணத்துப்பூச்சிக்கே உரிய தனிச்சிறப்பு. வெயில் காலத்தில் இதன் றெக்கையில் காணப்படும் புள்ளிகள் குறைந்தும், மழைக் காலத்தில் இதன் றெக்கையில் காணப்படும் கண் போன்ற புள்ளிகளும் வரிகளும் கூடுதலாகக் காணப்படும்.
எங்கள் வீட்டில் வைத்திருந்த தாவரங்களை பார்த்துப்போக மயில் வசீகரன் ஒரு நாள் வந்திருந்தபோது எடுத்த படம் இது. மழைக்காலத்தில் எடுக்கப்பட்ட படம் இது என்பதை மயில் வசீகரனின் றெக்கையில் அதிகரித்துள்ள புள்ளிகளே காட்டிக்கொடுத்துவிடும்.