உயிர் மூச்சு

கோலப் பறவைகள்

ப.ஜெகநாதன்

கோலங்கள், குறிப்பாக மார்கழி மாதத்தில் வாசலில் இடப்படும் கோலங்கள் எப்போதுமே வியக்க வைப்பவை. சிறு வயதில் காலையிலும் மாலையிலும் வாசல் கூட்டி, நீர் தெளித்து, சில வேளைகளில் சாணியையும் கரைத்து மெழுகிய பின் அம்மா இடும் அழகான கோலங்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

அம்மா வாங்கி வைத்திருக்கும் கோலப் புத்தகத்தைப் பார்த்து சில வேளைகளில் நானும் எனது தங்கையும் சிலேட்டில் கோலங்களை வரைந்து பழகிக்கொள்வோம். ஆர்வமிருந்தாலும் ஆண் பிள்ளை கோலமெல்லாம் போடக்கூடாது என சிலர் கேலி செய்ததால் வெட்கப்பட்டு, இந்த அருமையான கலையை தொடர்ந்து கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டேன். இப்போதெல்லாம் கோலங்களைப் பார்த்து ரசிப்பதோடு சரி.

காலங்கள் செல்லச் செல்ல எங்கள் தெருவிலும் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. வயதாகிவிட்டதால் முதுகு வலியால் அவதிப்படும் அம்மா இப்போதொல்லாம் கோலமிடுவதில்லை. பணி நிமித்தம் வெளியூரில் வசிப்பதால் மார்கழி மட்டுமில்லாமல் பொங்கலுக்குக்கூட எப்போதாவதுதான் வீட்டுக்குப் போகமுடிகிறது.

இப்போதெல்லாம் பொங்கல் என்றவுடன் என்னைப் போன்ற பறவை ஆர்வலர்கள் மும்முரமாக இருப்பது பொங்கல் பறவை கணக்கெடுப்பில்தான். கடந்த நான்கு ஆண்டுகளாக பொங்கல் பறவைக் கணக்கெடுப்பு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு வீட்டுக்குச் சென்றபோது பறவைகளை நோக்க வெகுதூரம் பயணிக்க முடியவில்லை. அதனால் வீட்டிலிருந்தும், தெருவிலிருந்தும் பல வகைப் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வீட்டின் எதிரில் இருக்கும் அரச மரத்தில் குக்குறுவான்களையும், மைனாக்களையும், குயில்களையும், தெருவில் பறந்து திரிந்து மின்கம்பிகளில் அமர்ந்துகொண்டிருக்கும் காகங்களையும், கட்டைச் சுவர்களின் வாலை இப்படியும் அப்படியுமாக ஆட்டி கத்திக்கொண்டே கூட்டமாக மாடிவிட்டு மாடி தாவும் தவிட்டுக்குருவிகளையும், காகங்களின் விரட்டலுக்கு இறக்கைகளை அசைக்காமலேயே லாகவமாக விலகி காற்றில் மிதந்து செல்லும் கரும்பருந்துகளையும், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் உண்ணிக்கொக்குகளையும் கவனித்துக்கொண்டே தெருவில் நடைபோட்டுக்கொண்டிருந்தேன்.

இடையிடையே பலரின் வீட்டு வாசலில் இருந்த கோலங்களையும் பார்த்து ரசித்தவாறே சென்றேன். சில கோலங்கள் மிகவும் அழகாகவும் சில சுமாராகவும் இருந்தன. ஆனால், சில சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருந்தன. அந்த சுமாரான கோலங்களைக்கூட யாரும் மிதிக்கக்கூடாதென அவற்றைச் சுற்றி கற்களை வைத்திருந்தது வேடிக்கையாக இருந்தது. நல்ல கோலமாக இருந்தால் யார் மிதிக்கப் போகிறார்கள்?

கலர் கோலமாவில் போடப்பட்ட கோலங்களே அதிகம். கோலத்தின் நடுவில் சிலரது வீட்டில் மட்டுமே பரங்கிப்பூவை சாணியில் குத்தி வைத்திருந்தனர். பெரும்பாலும் பொங்கல் பானையும் கரும்பும் கொண்ட கோலங்களே அதிகம். என்றாலும் பறவைகளைக் கொண்ட சில கோலங்களையும் கண்டேன். பச்சைக்கிளி, மயில், வாத்து, குருவி போன்றவையே கோலங்களில் அதிகமாகத் தென்பட்ட பறவைகள்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பை பிரபலப்படுத்த கோலங்களைக் கொண்ட விளம்பரத்தாள்களை தயாரிக்கலாமே என்ற யோசனை அப்போதுதான் தோன்றியது. நண்பர் செல்வகணேஷிடம் கேட்டபோது அவரது தங்கைகளும் பறவை ஆர்வலர்களுமான பிரியதர்ஷினியும் பிரியங்காவும் இட்ட கோலத்தை படமெடுத்துப் பகிர்ந்தார். அதைப் போலவே திருவண்ணாமலையிலிருந்து பறவை ஆர்வலரும், ஓவியருமான நண்பர் சிவக்குமார் செம்மீசை சின்னானை கோலமிட்டு படமெடுத்து அனுப்பினார்.

இந்த ஆண்டு பெங்களூரிலிருந்து பறவை ஆர்வலர் வித்யா சுந்தர் மார்கழி மாதத்தில் அவரது வீட்டு வாசலில் மிக அழகாக பல வகைப் பறவைகளைக் கோலமிட்டு, அவற்றின் படங்களை எடுத்து அனுப்பினார். அவரே இந்த ஆண்டு பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்கான விளம்பரத்தாளுக்கு அழகிய கோலத்தை வரைந்து அனுப்பினார்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பதால் சிறிதாக இருக்கும் வாசலில் பெரிய கோலங்களைப் போட முடிவதில்லை என அவர் குறைபட்டுக்கொண்டார். சிறிய வாசலாகவும், யாரும் அதிகம் பார்க்க வாய்ப்பில்லாமல் இருக்கும் இடத்திலும்கூட இது போன்ற அழகான, துல்லியமான படைப்புகளை ஆர்வத்துடன் உருவாக்குவது பாராட்டத்தக்கதே.

அம்மாவுக்கு உடல்நிலை சரியாக இருந்திருந்தால் பறவைக் கோலத்தை இடுமாறு கேட்டிருப்பேன். நிச்சயமாக என்னை ஏமாற்றி இருக்க மாட்டார். அண்மைக் காலமாக எனது தங்கையும் அழகாகக் கோலங்களை இட்டு அவ்வப்போது படங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார். அதனால் பறவை கொண்ட ஒரு கோலத்தை இடுமாறு தங்கையிடமும் கேட்டிருந்தேன்.

முயல்கிறேன் என்றார். ஓரிரு நாட்களுக்குப் பின் ஒரு கோலத்தின் படத்தை அனுப்பி, இது நல்லாயிருக்கா எனக் கேட்டிருந்தார். அது பறவைகளின் மூதாதையான டைனசோர்போல இருந்தது. என்றாலும் தங்கையை ஏமாற்றமடையச் செய்யக் கூடாதே என்பதால் “சூப்பர், கோலத்தை சுற்றி கற்களை வை” என்று பதில் அனுப்பினேன். அது முதல் கோலங்களின் படங்களை என் தங்கை எனக்கு அனுப்புவதே இல்லை.

தமிழகத்தின் பொதுப் பறவை காக்கையா, மைனாவா?

2018 பொங்கல் பறவைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகம் தென்பட்ட பறவையாக மைனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய மூன்று ஆண்டுகளில் காக்கையே முதலிடத்தைப் பிடித்திருந்தது. இந்த முறை மைனாவுக்கு அடுத்ததாக காக்கை, கரிச்சான், மடையான், பச்சைக்கிளி, பனை உழவாரன், சின்னான் (கொண்டைக்குருவி), அண்டங்காக்கை, தவிட்டுக்குருவி, வெண்மார்பு மீன்கொத்தி போன்றவை வருகின்றன.

27CHVAN_06PBC2018-Day4.jpg27CHVAN_01

2015-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பொங்கல் பறவைக் கணக்கெடுப்பு நடைபெற்றுவருகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு நான்காவது ஆண்டாக இந்த முறையும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2015-ம் ஆண்டில் 442 பட்டியல்களும், 286 பறவை இனங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டில் 1,216 பட்டியல்களும் (தற்காலிகம்), 341 பறவை இனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவை, சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சேலம், புதுச்சேரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பறவை கணக்கெடுப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு நடைபெற்றிருக்கிறது.

அதேநேரம் தேனி, பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பறவை கணக்கெடுப்பு பெரிதும் நடைபெறவில்லை. அதனால், இந்தப் பகுதிகளின் பொதுவான பறவைகள் எவை என்பதைக் கணிக்க முடியவில்லை.


கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

SCROLL FOR NEXT