சமூகத்தில் புழங்கிவரும் பழமொழிகள், சொலவடைகளில் சில அர்த்தம் செறிந்தவை. பல, அடிப்படையற்றவை. ஐதீகங்களும் மரபான நம்பிக்கைகளும் அவற்றை நம் தலைமுறைவரை நகர்த்தி வந்துள்ளன. பாம்புகளைப் பற்றிய தொன்மங்களும் ஐதீகங்களும் இன்னும் நீடிக்கின்றன. சிக்கல் என்னவென்றால், இவை மத நம்பிக்கைகளோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. சட்டென்று யாரும் இதில் கைவைத்துவிட முடியாது.
மகுடிக்குப் பாம்பு ஆடுவது சாத்தியமல்ல; நாகமணி என்கிற ஒரு சமாச்சாரம் யதார்த்த உலகில் இல்லவே இல்லை. நினைவில் வைத்துக்கொண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகும் யானை பழிவாங்கும் என்பதில் கொஞ்சமும் அறிவியல் இல்லை. பனித்துளி விழுந்து முத்து உருவாவதில்லை. பல்லி என்னும் ஐந்தறிவு உயிர் சாத்திரக் கணிப்புகளையோ சமிக்ஞைகளையோ தருவது நடவாத ஒன்று. இறந்தவர்களின் ஆன்மாக்கள் பூச்சிகளாக வருவதும் ஐதீகம்தான்.
பிள்ளைப் பருவ அனுபவங்களின் நீட்சியாக நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குழந்தை உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆச்சரியங்களை, அற்புதங்களை, விநோதங்களை, சாத்தியமற்ற கனவுகளை அந்தக் குழந்தை நிகழ்த்திப் பார்க்கவும் கண்டு அனுபவிக்கவும் துடித்துக் கொண்டிருக்கிறது.
`டிஸ்னி லேண்ட்' என்னும் கருத்தியல் பிரம்மாண்டமான வணிகமாகப் புகழ் பெறுவதற்கும் இதுவே காரணம். சமூக நினைவு அடுக்கு என்பது தனிமனித அனுபவங்களின் வரலாற்றுத் தொகுப்புதானே. கேட்கச் சுகமான பொய்களை கேட்டுக்கொண்டே இருக்க மனம் விரும்புகிறது. யதார்த்த உலகமும் கற்பனை உலகமும் நமக்குள் ஒரே நேரத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
ஐதீகங்களின் விநோத உலகத்தில் பசுமை குன்றாமல் நீடிக்கும் ஓர் ஐதீகம் வலம்புரிச் சங்கு பற்றியது. வலம்புரிச் சங்கு உங்கள் வாழ்க்கையில் குறைவற்ற வளத்தையும் அளவற்ற இன்பத்தையும் கொடுக்கும் என்கிற நம்பிக்கை இந்தியச் சமூகங்களில் இன்றும் நீடிக்கிறது. வலம்புரிச் சங்கில் விலையுயர்ந்த முத்து விளைகிறது என்கிற நம்பிக்கை சங்க காலத்திலிருந்தே தொடர்கிறது: வலம்புரியீன்ற நலம்புரி முத்தம் (சிலப்பதிகாரம்: 27-244), மாசறு பொன்னே வலம்புரி முத்தே (சிலப்பதிகாரம் 2:73), வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் , வலம்புரியொரு முத்தன்ன (பெருந்தொகை 1712:25-27) நளவெண்பா, திணைமாலை நூற்றைம்பது. முத்தொள்ளாயிரம், திருமறைக்காடு, திருவலம்புரம், ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களிலும் `வலம்புரி முத்து’ என்னும் கருதுகோள் பதிவாகியுள்ளது.
வலம்புரிச் சங்குகள் கடற்கரைக்கு வந்து முத்துகளைச் சொரிந்துசெல்லும் என்றும், வலம்புரிச் சங்கு தானே முழங்கும் என்றும் நம்பிக்கை நிலவிவந்தது. வலம்புரிச் சங்கினும் உயர்வான சங்கு சலஞ்சலம்; சலஞ்சலத்திலும் உயர்வான சங்கு பாஞ்சசன்யம் என்று மக்கள் கருதினர். ஆயிரம் இடம்புரிச் சங்குக்கு நேரானது ஒரு வலம்புரி; ஆயிரம் வலம்புரிக்கு ஒரு சலஞ்சலம்; ஆயிரம் சலஞ்சலத்துக்கு நேரானது ஒரு பாஞ்சசன்யம்.
சலஞ்சலத்தின் உள்ளே வெள்ளி நிறத்தில் இருக்கும் மூன்று கோடுகள் மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று சில சம்ஸ்கிருத நூல்கள் சொல்கின்றன. இந்த நம்பிக்கைகளின் காரணமாக வலம்புரிச் சங்குகளைப் பெருந்தொகை அளித்து வாங்கிக்கொண்டனர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இடம்புரிச் சங்கு 300 ரூபாய்க்கு விற்கப்பட்டபோது வலம்புரிச் சங்கின் விலை ஒரு லட்சம் ரூபாய்.
அறிவியலின் வெளிச்சத்தில் இவற்றைப் புரிந்துகொள்வது ஆரோக்கியமானது. இன்றுவரை சலஞ்சலம், பாஞ்சசன்யம் என்பதாக விவரிக்கப்படும் சங்குகளை எவரும் கண்டதில்லை. அது போலவே, வலம்புரிச் சங்கின் மேலான சக்தியை மெய்ப்பிக்கும் ஆதாரம் ஏதுமில்லை. வலம்புரிச் சங்குகள் இடம்புரிச் சங்கு போலன்றி மிக அரிதாகக் கிடைப்பவை, அவ்வளவுதான். அரிது என்பதால் அது அபூர்வ சக்திபெற்றது என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.
(அடுத்த வாரம்: எப்படி வருகிறது வலம்புரி?)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com