நா
ட்டு நாய்களுக்கான தேசிய, உலக அங்கீகாரம் என்பதெல்லாம் பெயரளவிலான கவுரவம் மட்டும்தானா? இல்லை!
வெளிநாட்டில் வாழும் ஒருவர், இந்திய நாய் இனத்தைச் சேர்ந்த நாயை வாங்க முன்வந்தால், ‘உலக அங்கீகாரம் இல்லாத இனம்’ என்ற அடையாளம் ஒரு பெரும் தடையாக உள்ளது. அது இந்த இனத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
அந்தத் தடை உடையும்போது உலக அளவில் இவற்றுக்கான சந்தையும் விரிவடையும். இன்று நம்மிடம் பரவி, கிராமங்கள்வரையிலும் வந்து சேர்ந்துவிட்ட டாபர்மேன், லாப்ரடாரைப் போன்று ராஜபாளையம் நாய் இனம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவத் தொடங்கும்.
இந்த அங்கீகாரம் ராஜபாளையம் நாய்களுக்கு மட்டும்தான் சாத்தியமா என்றால், தமிழகத்தின் எல்லா நாய் இனங்களுக்கும் சாத்தியம்தான். இன்றைய சூழலில் அதிகப்படியான சாத்தியக்கூறுகளை உடையது ராஜபாளையம் நாய்கள். அவ்வளவே!
அப்போது மற்ற நாய்கள் அந்த நிலையை அடைய என்ன தடை இருக்கிறது? இப்போது கன்னி (கூர்நாசி நாய்கள்) நாய்களை எடுத்துக்கொண்டால் 90 சதவீதத்துக்கு மேலான நாய்கள் இந்திய கென்னல் கிளப்பில் பதிவு செய்யப்படாதவையே. அதனால் அவை தரமற்ற நாய்கள் என்று எண்ணுவது மிகவும் தவறானது.
அந்த நாய் இனம் பதிவுசெய்யப்படாததற்குக் காரணம், அவை அதிக அளவில் கிராமப்புற மக்களால் வளர்க்கப்பட்டு வருபவை. அவர்களுக்கு, ‘அங்கீகாரம்’ குறித்தெல்லாம் அறிமுகம் இல்லை என்பதுடன் பெரிய தேவையும் இல்லை!
அவற்றை வணிகரீதியில் முன்னெடுக்க விரும்புபவர்கள் மட்டுமே தாங்கள் வளர்க்கும் நாய்களைப் பதிவுசெய்து வைத்துள்ளனர். மேலும், கிராமப்புறங்களில் கன்னி நாய் வளர்ப்பவர்களுக்கு ‘நாய்க் கண்காட்சி’ சற்று மிகையான ஒன்றாகத் தோன்றுகிறது. அத்துடன் அவர்களின் தேவைக்கு ஏற்ற உடல்வாகு உள்ள நாய்களைத்தான் தேர்வுசெய்து வளர்க்கின்றனரே தவிர, கண்காட்சிக்காக அவர்கள் வளர்க்கவில்லை.
தவிர, தங்களுக்கான கவுரவத்தின் ஒரு குறியீடுபோல, தாங்கள் வளர்க்கும் நாய்களை கிராம மக்கள் கருதுகின்றனர். அதனால் அவற்றைப் போட்டியில் நிறுத்தி, வேறு யாரோ ஒரு அந்நியர் அதன் தரம் இவ்வளவு என்று கூறுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கோம்பை பற்றி சமீபகாலமாகத்தான் புரியத் தொடங்கி உள்ளது. கோம்பை என்பது செவலை நிறத்துடனும் கருமுகத்துடனும் வரும் என்பதுதான் இந்திய கென்னல் கிளப்பின் வரையறை. ஆனால், அவை மற்ற நிறத்திலும் வருகின்றன என்பதுதான் நிதர்சனம். இந்தக் குழப்பத்தைக் களையவே சில காலம் ஆகும்.
சிப்பிப்பாறை சாம்பல் நாய்கள் விஷயத்தில் கதையே வேறு. அப்படி ஒரு இனம் இருப்பதே பலருக்குத் தெரியாது. மேலும், அவை இந்திய கென்னல் கிளப்பால் அங்கீகரிக்கப்படவில்லை.
நாட்டுநாய் இனங்களை வளர்க்கும் மக்களும் அதை முன்னெடுக்க நினைக்கும் இந்திய கென்னல் கிளப் போன்ற அமைப்புகளும் சேர்ந்து ஒரு புள்ளியில் சந்திக்கும்பட்சத்தில், நாட்டு நாய்களுக்கு அங்கீகாரம் சாத்தியம்தான்!
(அடுத்த வாரம்: இறுதியாகச் சில வார்த்தைகள்...)
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com