ப
டத்தில் இருக்கும் பூச்சியைப் பார்த்தவுடன் பலரும், இது வெட்டுக்கிளி தானே என்று கேட்பார்கள். இல்லை, இது வெட்டுக்கிளி இல்லை.
இதை வெட்டுக்கிளியோடு பலரும் குழப்பிக்கொள்வார்கள். பச்சையாகவும் பார்ப்பதற்கு வெட்டுக்கிளியைப் போன்ற தோற்றத்துடன் இருந்தாலும், இது முற்றிலும் வேறுபட்ட ஒரு பூச்சி. கும்பிடுபூச்சி (Praying Mantis).
பறந்து செல்லும் இந்தப் பூச்சியை தோட்டம், புல்வெளி, காட்டுப் பகுதிகளில் பார்க்கலாம். சிறிய அளவிலிருந்து பெரிய அளவுவரை பல்வேறு அளவுகளில் காணப்படுகிறது. நாடு முழுவதும் தென்படும்.
பச்சை நிற கும்பிடு பூச்சி வகைகள் சட்டென்று பார்ப்பதற்கு இலையைப் போலவே தோற்றமளிக்கும். பதுங்கி வேட்டையாடி பூச்சிகளைப் பிடித்துண்ணும் பண்பு கொண்டது. முட்கள் போன்ற தூவிகளைக் கொண்ட முன்னங்கால்களை இரையைப் பிடிக்கப் பயன்படுத்துகிறது. முன்னங்கால்களை மடக்கி வைத்திருக்கும்போது சாமி கும்பிடுவதுபோல; வணக்கம் சொல்வதுபோல இருப்பதால் இதற்குக் கும்பிடு பூச்சி என்று பெயர்.
எங்கள் வீட்டில் துணி காயப்படும் கம்பி பல பூச்சிகள் ஓய்வெடுக்கும் இடமாகப் பயன்பட்டிருக்கிறது. இந்தப் பூச்சியும் அதுபோல ஒரு நாள் ஓய்வெடுக்க வந்தபோது கொடுத்த போஸ் இது.