11
-வது சென்னை பறவை பந்தயம் ஜனவரி 7-ம் தேதி நடைபெற்றது. ஒரு நாள் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பறவை இனங்ளைப் பதிவு செய்வதே இந்தப் போட்டியின் நோக்கம்.
சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் இந்தப் போட்டியை ஒருங்கிணைந்திருந்தது. சுப்ரமணியம் சங்கர், விகாஸ் மாதவ் ஆகிய இருவரும் நடுவராகச் செயல்பட்டனர்.
பேராசிரியர் த. முருகவேள் தலைமையிலான ‘கோல்டன் ஓரியோல்’ குழு 116 பறவை இனங்களைப் பதிவுசெய்து முதலிடத்தைப் பெற்றது. ‘பிராமினி கைட்’ குழுவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ மித்ரா தலைமையிலான குழு வெள்ளைப் பூனைப் பருந்தை சிறுவாத்தூரில் பதிவுசெய்தது. இந்த பறவை பந்தயத்தின் சிறந்த பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. குளிர்காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்கு வலசை வரும் அரிய பறவை இது என்று சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கச் செயலாளர் கே.வி. சுதாகர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் பரிசுகளை வழங்கினார்.
- ஆதி