ஆ
ழி சூழ அமைவது உலகம். ஐம்பெரும் கண்டங்கள் உட்பட உலகின் அனைத்து நிலப்பரப்புகளையும் தீவு என்றே வரையறுக்க வேண்டும். கடல் தொடாத நாடுகள் என்பது அரசியல் /ஆட்சி எல்லையைக் குறிப்பிடும் சொல்தான்.
தரைப் பரப்புகள்போல பெருங்கடலின் பேராழங்களிலிருந்து எழும் மலைத் தொடர்களில் சில பகுதிகள் தட்டைப் பரப்பாக அமைந்துவிடுகின்றன. எரிமலைப் பிழம்புகள் வெளியேறி, நாளடைவில் குன்றுகள் உருவாகும்போது, அலைகளின் தாக்கத்தால் குன்றின் முனை பரப்பாக மாறுகிறது.
பிற்காலத்தில் நிலநடுக்கத்தால் இக்குன்றுப் பரப்புகள் கடல்மட்டத்துக்குக் கீழே தாழ்ந்துவிடுகின்றன. இந்தக் கடலடிக் குன்றுப் பரப்புகளை ‘கயாட்’ என்கிறார்கள். பல தீவுகளும் இவ்வகையில் தோன்றுகின்றன.
பேராழங்களின் இன்னொரு சுவாரஸ்யமான அமைவு கேன்யன் எனப்படும் செங்குத்துக் குன்றுகள். கண்டச் சரிவுகளிலிருந்து தொடங்கி, பேராழத்தை நோக்கி நீளும் இந்தச் செங்குத்துக் குன்றுகள் வடகிழக்கு அமெரிக்கக் கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆப்பிரிக்காவின் காங்கோ, இந்திய – பாகிஸ்தான், சிந்து, கங்கை, கழிமுகக் கடற்கரைகளிலும் இந்தக் குன்றுகள் காணப்படுகின்றன. கங்கை செங்குத்துக் குன்று, வங்காள விரிகுடாவில் பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீள்கிறது.
உலகிலேயே நீளமான மலைத்தொடர் இமயமலை. ஆனால், கடலடி மலைத்தொடர்கள் இமயமலைத் தொடரைவிட 15 மடங்கு நீளமானவை. அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களின் மலைத்தொடர்களைக் கூட்டினால் 75 ஆயிரம் கிலோ மீட்டர்! இதன் தோராய உயரம் 1.6 கிலோ மீட்டர். இவை தவிர ஆங்காங்கே சிறுசிறு குன்றுகளும் அமைந்திருக்கின்றன. நிலநடுக்கங்கள் ஏற்படாத இடங்களில் இவை கடலடி மேடுகளாய் (Sea rises) நீடிக்கின்றன.
குன்றுகள், கடலடி மலைத்தொடர்கள், பாதாளங்கள், நிலமேடுகள், தீவுகள், செங்குத்துக் குன்றுகள் ஆகியவை நெடுங்கடல் நீரோட்டங்களின் போக்கைக் கட்டுப்படுத்துகின்றன. துருவ – நிலநடுக்கோடு நீரோட்டம், கிழக்கு– மேற்கு நெடு நீரோட்டம் யாவற்றையும் இப்பேராழ அமைவுகள் தணித்து திசைதிருப்பி விடுகின்றன. அவ்வாறு கடலுயிர்களின் இருப்பையும் இனப்பெருக்கத்தையும் நிர்ணயிக்கின்றன.
இத்தனைப் பரப்பும் வகைமையும் கொண்ட பெருங்கடல், ஒரு முப்பரிமாண ஊடகம். அதன் கனபரிமாணம் முழுவதும் நுண்ணுயிர் தொடங்கி பலவகை உயிரினங்கள் வாழ்கின்றன. ஓதப்பகுதி, கரைக்கடல், ஆழ்கடல் பகுதிகளில் உயிரினங்களின் இருப்பைப் பல்வேறு காரணிகள் கட்டுப்படுத்துகின்றன. அடித்தரையின் சேறு, ஆழத்தில் உள்ள உயிர்ச்சத்துகள், ஒளி ஊடுருவும் தன்மை, பெருங்கடல் நீரோட்டங்கள் ஆகிய அனைத்தும் இணைந்து இயங்கும் சூழலியல் அது.
நம் பார்வைக்கு அப்பால் பெருங்கடல்களில் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன!
கட்டுரையாளர்,
பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com