உயிர் மூச்சு

கடலம்மா பேசுறங் கண்ணு 35: கடலின் சமையல்காரர்கள்!

வறீதையா கான்ஸ்தந்தின்

கடல்வாழ் விலங்குகளை நீந்தும் வகை, மிதக்கும் வகை, கடலடித் தரைவாழ் வகை எனப் பிரித்துவிடலாம். பழவேற்காடு ஏரியில் சில நீந்தும் நண்டினங்களைப் பார்த்திருக்கிறேன். மன்னார்க் கடற்பகுதியில் 16 வகை நீந்தும் நண்டினங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

மிதவை உயிரினங்கள் மிகச்சிறியவை. தாவர மிதவை உயிரினங்களும் பாசிகளும்தான் கடலின் சமையல்காரர்கள். ஒட்டுமொத்தக் கடலுயிர்களும் உணவு உற்பத்தி செய்து வழங்குவது இவர்களின் வேலை.

உடலைவிடப் பெரிய உணவு

கடலின் அடியாழங்களில், குறிப்பாகக் கண்டத்திட்டுக்கு அப்பாலுள்ள பேராழங்களில் சில மீன்கள் வாழ்கின்றன. கடும் குளிர், காரிருள், பஞ்சம் நிலவும் அந்த உலகத்துக்கு இவ்வுயிரினங்கள் தங்களைப் பழக்கிக் கொண்டுள்ளன. அகன்ற தாடைகள், கூரிய பற்கள், வெளிச்சம் உமிழும் உறுப்புகள் போன்ற அபூர்வ குணங்கள் கொண்ட மீன்கள் இவை.

‘விழுங்கி மீன்’ தன் உடலளவைவிட ஐந்து மடங்கு பெரிய இரையை விழுங்கிவிடும். ஒட்டகம் தண்ணீர்க் கிடைக்கும்போது பைகளில் நிரப்பிக்கொள்வது போல எப்போதாவது கிடைக்கிற இரையைத் தவறவிடாமல் தின்று வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன.

எல்லோருக்கும் வாய்ப்பு

கடலின் உயிர்த்திரள், எப்சபோதும் சமநிலையைப் பராமரித்துக் கொள்கிறது. ஒரு கணக்கில் பார்த்தால் பிறப்பும் இறப்பும் சம அளவில் நிகழ்கின்றன. இறந்துபோகும் உயிரினங்களைச் சிதைத்தால்தான் உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் கிடைக்கும்.

இந்தச் சிதைப்பு வேலையைக் கடமை பிசகாமல் செய்துகொண்டிருப்பவை பாக்டீரியா என்கிற நுண்ணுயிர்கள். கடலின் சேறு சகதிகளில் இவை நிறைந்துகிடக்கின்றன. தாவர மிதவை உயிரிகளும் பாசிகளும் உணவு சமைக்க மூலப்பொருளை வழங்குபவை இந்தச் சிதைக்கும் நுண்ணுயிரிகளே.

ஒவ்வொரு உயிரினமும் தனக்குத் தோதான உணவு முறையை, வாழிடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. பகிர்ந்துகொள்ளத் தயார் என்றால் எல்லோருக்கும் வாழும் வாய்ப்பளிக்கிறது இயற்கை.

(அடுத்த வாரம்: நினைவென்னும் ஜி.பி.எஸ்!)

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் வள அரசியல் ஆய்வாளர்

SCROLL FOR NEXT