தவறுகளில் இருந்து புதிதாகக் கற்றுக் கொள்ளும் திறனைப் பெற்ற உயிரினம் மனித இனம். உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கை ஏற்கெனவே எழுதிய நிரலின்படி, தவறின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதன் மட்டுமே தவறுகளைத் திருத்தி கொள்ளாத, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத ஜீவியாக இருக்கிறான்.
இயற்கை பல வகைகளில் எச்சரிக்கைகளைக் கொடுத்த பிறகும், கற்றுக்கொள்ளாத மனித இனத்தை வேறென்னச் செய்து திருத்த முடியும்? இதற்குச் சிறந்த உதாரணம், கடந்த ஆண்டு உத்தர்கண்ட்டில் நிகழ்ந்த பேரழிவு. அந்தப் பேரழிவில் இயற்கைச் சீற்றத்தின் பங்கு முழுமையானதல்ல. ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்ததற்கு மனிதத் தவறுகளே முதன்மைக் காரணம்.
பேரழிவின் முகம்
உத்தர்கண்ட்டில் மே மாதம் முதல் அக்டோபர் வரை கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்களை 10 லட்சம் பக்தர்கள் தரிசிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டபோது, புவியியல் ரீதியில் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பிருந்த இந்தப் பகுதிகளில் பக்தர்கள் குவிந்து கிடந்தார்கள். பேரழிவு நிகழ்ந்த நேரத்தில், கேதார்நாத்தில் இருந்த பக்தர்களின் எண்ணிக்கை 26,000. அங்கு மட்டும் 5,500 பேர் உயிரிழந்தனர்.
இந்தப் பேரழிவுக்கு முறைப்படுத்தப்படாத சுற்றுலாதான் காரணம் என்று தேசியப் பேரழிவு மேலாண்மை நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்த அறிக்கையில் தெளிவாகக் கூறியிருக்கிறது. இப்போது ஓராண்டு கடந்துவிட்டது. ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? கிஞ்சித்தும் இல்லை என்பதுதான் நிதர்சன நிலை.
மாறியது என்ன?
சூழலியல் ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இந்த மலைத் தொடர் பகுதியில் சுற்றுலாவை முறைப்படுத்த மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சொற்பத்திலும் சொற்பம். பேரழிவு ஏற்பட்ட பிறகு அனைத்துத் தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்ட மாநில அரசு, பல வாக்குறுதிகளை அப்போது அள்ளி வீசி இருந்தது. ஒவ்வொரு புனிதத் தலத்தின் சுற்றுலாப் பயணிகள் தாங்குதிறன் (Carrying capacity) தொடர்பாகக் கணக்கிட ஆராய்ச்சி நடத்தப்படும், அதற்கு ஏற்ப சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கட்டுப் படுத்தப்படும். பயோமெட்ரிக் பதிவு அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும், பயோமெட்ரிக் அட்டையும் வழங்கப்படும். தீவிர மருத்துவப் பிரச்சினை உள்ள சுற்றுலா பயணிகள் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் இன்றைக்கு, அது எதுவும் நடந்ததற்கான அத்தாட்சி இல்லை.
இதற்கு அரசுத் தரப்பில் காரணமாகச் சொல்லப்படுவ தெல்லாம், ‘பயோமெட்ரிக் அட்டை பற்றி விழிப்புணர்வு இல்லாமலேயே பக்தர்கள் கோயிலை அடைந்து விடுகிறார்கள். அவர்களைத் திரும்ப அனுப்ப முடியாது' என்பதுதான். இன்றைக்கும் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு அரசுத் துறையும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வித்தியாசமாகக் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன.
உத்தர்கண்ட் அரசு வாக்குறுதி அளித்தபடி, மாநிலச் சுற்றுலா அமைச்சகம் 2014 மார்ச் 8-ம் தேதிதான் மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தலங்களின் தாங்குதிறன் தொடர்பான ஆராய்ச்சிக்கான முன்மொழிவு கேட்டு மிகமிகத் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டது.
காத்திருக்கும் அழிவு
கடந்த ஆண்டு நிகழ்ந்த பேரழிவால் உத்தர்கண்ட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு சற்றுச் சரிந்திருக்கிறது. ஆனால், இது முறையான விழிப் புணர்வால் ஏற்பட்ட ஒன்றல்ல.
கேதார்நாத்துக்கு இந்த ஆண்டு இதுவரை சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை 26,000 என்பதை வைத்துப் பார்க்கும்போது, மீண்டும் ஒரு பேரழிவு நிகழ்ந்தால் கடந்த ஆண்டைப் போலவே மோசமான இழப்பே ஏற்படும் என்று தெரிகிறது.