க
டல் காட்சிப்படுத்தும் அருமையான சூழலியல் கட்டமைவுகளில் பவளப்புற்றுகள் (Corals) மிக முக்கியமானவை. கரைக்கடல், தீவுப் பகுதிகளின் மாசுபடா சூழல்களில் சற்றொப்ப 21 டிகிரி செல்சியஸ் மிதவெப்பம் நிலவும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பவளப்புற்றுகள் அமைகின்றன.
நைடேரியா வகையைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பவளப்புற்று இனங்கள், தாம் வாழும் காலத்தில் தம்மைச் சுற்றிச் சுண்ணாம்புப் புற்றுகளை அமைக்கின்றன. இவ்வுயிர்களின் மறைவுக்குப் பிறகும் அந்தப் புற்றுகள் நிலைத்திருக்க, அவற்றின்மீது புதிய உயிரிகள் புற்றுகளை அமைத்துக்கொள்கின்றன. அந்தப் புற்றுகள் படிப்படியாக வளர்ந்து குன்றுபோல் உயர்ந்து கடல் மட்டத்துக்கு அடியில் பரவி வளர்கின்றன.
இந்தப் பவளத்திட்டுகளில் வாழும் சுசாந்தலே என்னும் உயிரிகள் பவளத்திட்டுக்குக் கவர்ச்சியான நிறங்களைத் தருகின்றன. மெல்லுடலிகள், குழியுடலி, துளையுடலி, கணுக்காலி, மீன்கள், ஆமைகள், கடல் அட்டை, கடல் வெள்ளரி போன்ற முட்தோலிகள், மீன்கள், திமிங்கிலம், கடற்பசு முதலிய எண்ணற்ற வகை விலங்கினங்களும், கடற்பாசிகள், கடற்கோரைகள் போன்ற பல நூறு தாவர இனங்களும் பவளத்திட்டுகளைச் சார்ந்து வாழ்கின்றன.
10,500 சதுர கிலோ மீட்டர் மன்னார் வளைகுடாக் கடலுயிர்க் கோளப் பகுதியில் இருக்கும் 21 சிறு தீவுகளைச் சூழ்ந்து 3,600 உயிர் வகைகள் வாழ்கின்றன. உலகின் உயிரினப் பன்மைச் செறிவு மிகுந்த ஐந்து கடலுயிர் உய்விடங்களுள் ஒன்றாக இப்பகுதி கருதப்படுகிறது. இது தவிர, இந்தியாவில் பாக் நீரிணையிலும் கட்ச் வளைகுடாவிலும் அந்தமான் நிகோபார், லட்சத் தீவுகளிலும் பவளத்திட்டுகள் உள்ளன.
லட்சத்தீவின் 35 தீவுத் தொகுப்பில் 11 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பவளப்புற்று இனங்கள் வாழும் இப்பகுதிகளில் ஸ்கிப்ஜாக் சூரைகள் தூண்டில்கள் மூலம் பிடிக்கப்படுகின்றன. பருவ மழைக் காலத்தில் மக்கள் பவளத்திட்டுகளின் உபவளங்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர்.
அந்தமான் நிகோபாரின் 350 தீவுகளில் 38-ல் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. கரைநோக்கித் தேயும் பவளத்திட்டுகளும் (fringing reefs) அலையாத்திக் காடுகளும் கடற்கோரை, கடற்பாசிப் படுகைகளும் இங்கு மிகுதியாக அமைந்துள்ளன.
இந்தியாவில் இவ்விரு தீவுப்பகுதிகளின் பவளத்திட்டுகள் மட்டுமே ஆரோக்கியமான சூழலியலில் நீடிக்கின்றன. மற்ற பகுதிகளில் கடல்தரையைத் தோண்டியும் பவளத்திட்டுகளை உடைத்தும் விஷம், வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடித்தும் பவளத்திட்டுகள் சிதைவு படுத்தப்பட்டு வருகின்றன. சேறு சகதி படிவதாலும் நகர்க் கழிவுகள் சேர்வதாலும் எண்ணெய்க் கசிவுகளாலும் கடற்சூழலியல் சிதைவுறும் சூழலில் மென்மையான பவளப்புற்று இனங்கள் நம் கடல்களிலிருந்து மறைந்து வருகின்றன.
(அடுத்த வாரம்: கடல் பொருளாதாரம்!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com