இந்தியாவில் பருத்தி உற்பத்தி கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-24ஆம் ஆண்டில் குறைவாக இருக்கும் என்று இந்தியப் பருத்தி சங்கம் கணித்துள்ளது. இந்தியப் பருத்தி சங்கத்தின் (சிஏஐ) முதல் மதிப்பீட்டின்படி உற்பத்தி சுமார் 2.951 கோடி பேல்கள் இருக்கும். எல் நினோ, இளஞ்சிவப்புக் காய்ப்புழுத் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பருத்தி விதைப்பு மொத்த பரப்பளவு 5.5 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் 20 சதவீதம் வரை மகசூல் வீழ்ச்சியடையக்கூடும் என இந்தச் சங்க அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் உள்நாட்டுத் தேவைகளுக்காக 22 லட்சம் பேல் பருத்தி இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் எனவும் இந்த அறிக்கை கணக்கிட்டுள்ளது.
வேளாண் செலவுகளில் இந்தியா மூன்றாம் இடம்: ஐ.நா. வேளாண் அமைப்பு 154 நாடுகளில் உணவு வேளாண் முறையில் ஆகும் செலவு குறித்து ஆய்வு மேற்கொண்டது. நவம்பர் 6, 2023 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த வேளாண் உணவு முறையின் மறைமுகச் செலவுகள் சுமார் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் எனக் கணக்கிட்டுள்ளது. சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிகம் வேளாண் செலவுகள் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
பசுமைக்குடில் வாயு, நைட்ரஜன் உமிழ்வுகள், நீர்ப் பயன்பாடு, உற்பத்தி இழப்புகள் ஆகியவற்றால் இந்த மறைமுகச் செலவுகள் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் உணவு முறைகளால் ஏற்படும் உற்பத்தி இழப்புகள் (நோய்களின் பாதிப்பு) மறைக்கப்பட்ட செலவுகளில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. இது 60 சதவீதமாகும். அதைத் தொடர்ந்து வேளாண் உணவுத் தொழிலாளர்களிடையே வறுமையின் காரணமான செலவு 14 சதவீதம். நைட்ரஜன் வெளியேற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் செலவு 13 சதவீதமாகும். - விபின்