உயிர் மூச்சு

கான்க்ரீட் காட்டில் 18: தலையைத் திருப்பும் சிலந்தி

ஆதி வள்ளியப்பன்

யிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஒரு நாள் இந்தச் சிலந்தியைப் பார்த்தேன். சட்டென்று பார்ப்பதற்கு முட்கால் சிலந்தியைப் போலிருந்தது. ஆனால், இது வேறுபட்ட சிலந்தி.

வழிகாட்டிப் புத்தகங்களை அலசி ஆராய்ந்தபோது இது ஒருவகை குதிக்கும் சிலந்தி என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இது சிவப்பு வரிச் சிலந்தி. ஆங்கிலத்தில் Red lined Jumper, அறிவியல் பெயர்: Telamonia dimidiate.

இதன் வயிற்றுப்பகுதி வெள்ளை நிறமாகவும், அதில் இரண்டு சிவப்பு நேர்கோடுகள் தெளிவாகவும் காணப்படும். தலையில் கண்களுக்குக் கீழே வெள்ளைத் திட்டு காணப்படும். முட்கால் சிலந்திகளுக்குக் கால்கள் ஒல்லியாக இருக்கும். இவற்றுக்குக் கால்கள் சற்றே தடிமனாக இருக்கும்.

நாடெங்கும் தென்படக்கூடிய இந்தச் சிலந்தி கிட்டத்தட்ட ஒரு செ.மீ. நீளம் கொண்டது. பெண் சிலந்திகள் சற்று பெரிதாக இருக்கும். திறந்தவெளிக் காடுகள், வயல்கள், தோட்டங்களில் காணப்படும்.

சுறுசுறுப்பான இந்த வேட்டையாடி, வலை கட்டுவதில்லை. பதுங்கியிருந்து இரையின் மீது பாய்ந்து வேட்டையாடுகிறது.

குதிக்கும் சிலந்திகளுக்கு ஒரு விநோதப் பண்பு உண்டு. எதிரிகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதற்கு வசதியாக தலையை பின்பக்கமாகவும் திருப்பிக்கொள்ளும் தன்மை கொண்டவை இவை. அதை இந்தச் சிலந்தி சிறப்பாகவே வெளிப்படுத்தும்.

SCROLL FOR NEXT