ம
ருதம் நெல்லை முதன்மையாகக் கொண்டதாக இருந்தாலும் கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்களும் எருமை போன்ற கால்நடைகளையும் கொண்ட பகுதி. நீர் வளம் கோரும் பயிர்கள் இங்கு விளையும். எனவே, பண்ணையைத் திட்டமிடும்போது நமது நிலம் மருதத் திணையில் வருவதாக இருந்தால், அதற்கேற்ற பயிர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
நீர் வளம் இருப்பதால் இங்கு ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகமானது. இதன் காரணமாகப் பூச்சித் தாக்குதல் அதிகமானது. அதனால் ஒட்டுமொத்தச் சூழல் மண்டலமே நஞ்சாக மாறியது.
எப்போதெல்லாம் ரசாயன உரத்தைப் பயன்படுத்துகிறோமோ, அப்போதெல்லாம் பூச்சிக்கொல்லி நஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எப்போதெல்லாம் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துகிறோமோ, அப்போதெல்லாம் ரசாயன உரத்தையும் பயன்படுத்த வேண்டும்.
இந்த நச்சுச் சுழலிலிருந்து விடுபட்டாக வேண்டும். எனவே, அதிக நீர் வளப்பகுதிப் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து தப்ப, நன்மை செய்யும் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவற்றின் உறவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குளவிகள், பொறி வண்டுகள், தட்டான்கள், தவளைகள், சிறு பறவைகள் என்று பூச்சிக் கட்டுப்பாட்டு நண்பர்களை உருவாக்க வேண்டும்.
மருத நிலத்துக்கு பசுந்தாள் உரங்களும் மூடாக்குப் பயிர்களும் மிகவும் அவசியமானவை. ஏனென்றால் நாம் மண்ணிலிருந்து எடுப்பது அதிகம். அதனால் அதற்கேற்ப திரும்பக் கொடுக்க வேண்டும். நாம் முன்னர் சொன்ன தாளாண்மைப் பண்ணை விதிகளில் ஒன்றான திரும்பப் கொடுக்கும் விதியைக் கணக்கில்கொள்ள வேண்டும்.
தாவரக் கழிவுகளை எரிப்பது கூடவே கூடாது. கரும்பின் தோகையை எரிப்பது மிக இயல்பாக நடக்கும் செயலாக உள்ளது. இது தவறு. அதுபோல களத்து மேடுகளில் காணப்படும் சண்டு, சவடுகளையும் எரிப்பது தவறான செயல்.
ஆயிரம் கிராம் எடையுள்ள பச்சைத் தாவரம் காயும்போது 300 கிராமாக மாறுகிறது. அதுவே எரிந்த பின்னர் 30 கிராம் சாம்பலாக மாறுகிறது. ஆனால் உண்மையில் நிலத்திலிருந்து அந்தத் தாவரம் எடுத்தது என்னவோ வெறும் 30 கிராம் மட்டுமே. நீராகவும், கரியமில வாயுவாகவும் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் அந்தத் தாவரம் பெற்றதுதான் அதிகம். எனவே, அதை எரிக்காமல் மண்ணுக்கு மீண்டும் தரும்போது, அது பன்மடங்காக மண்ணை வளப்படுத்துகிறது. மண்ணில் மட்கு சேர்கிறது.
பயிர்ச் சுழற்சி முறையும் மருத நிலத்துக்கு அவசியம். நெல்லுக்கு அடுத்து உளுந்து, அதன் பின்னர் ஒரு சிறு தவசம் என்று பயிர்களை சுழற்சி முறையில் இடுவதன் வழியாக ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரிசெய்யலாம்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com