நீரில் வாழ்வது என்பது தரை வாழ்க்கையிலிருந்து நிரம்ப வித்தியாசமானது. ஈர்ப்பு விசை காரணமாக, நிலத்தில் வாழும் உயிர்கள் தங்கள் எடையைச் சுமந்துதான் நகர முடியும். பூச்சிகள் முதல் பாலூட்டிகள் வரை, கால்கள் தாங்கிகளாகவும் இடப்பெயர்ச்சி உறுப்புகளாகவும் உதவுகின்றன.
கடல், அடர்த்தி மிகுந்த திரவம். அங்கும் மிதப்புத் திறன் கொண்ட உயிரினங்களுக்கு இந்தச் சுமையில்லை. ஆனால் உடலைச் சமநிலையில் வைப்பதும் இடப்பெயர்ச்சி செய்வதும் வித்தியாசமான உத்திகள்.
திடப்பரப்புகளில் ஒட்டி வாழும் உயிரினங்களுக்கு உணவு தேடுவதும் இனப்பெருக்கம் செய்வதும் சவால் மிகுந்த வேலை. பவளப் புற்று உயிரினங்கள், சிப்பிகள் சங்குகள் போன்றவை முதிர்ச்சியை எட்டும் முன்பு இளம் உயிரியாக சில காலம் நீந்திக் களிக்கின்றன. இந்தக் காலத்தில் நீரோட்டங்களின் திசையில் அவை வெகுதொலைவுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றன. போகிற இடத்தில் குடியேறி, இனத்தைப் பரவலாக்கம் செய்து கொள்கின்றன.
எருக்குக் கனி வெடித்தால் இறக்கை கட்டியதுபோல வெகுதூரம் காற்றின் போக்கில் பறக்கின்றன. எருக்கு இப்படித்தான் பரவலாகிறது. நாயுருவி விதைகள் கால்நடைகளின் உடலில் கொக்கியிட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. கடல் சூழலில் நீரோட்டங்கள் இந்த வேலையைக் கவனித்துக் கொள்கின்றன.
முட்டைகளை இட்டு இளம் உயிரிகளைப் பாதுகாத்து இனம்பெருக்கும் முனைப்பு எல்லா உயிர்களுக்கும் இயல்பான குணம்தான். குஞ்சுகள் எளிதாக எதிரிகளுக்கு இரையாகிவிடலாம். பசியாலும் சாதகமற்ற காலநிலையாலும் மடிந்துபோகலாம்.
எல்லா அபாயங்களையும் கணக்கில் கொண்டு தாய் உயிரிகள் ஏராளம் முட்டைகளை இடுகின்றன. முடிந்தவரை பாதுகாப்பான இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. மீன்கள், இறால் இனங்கள் இதற்காகக் கழிமுகங்களை நோக்கி வலசை வருகின்றன. சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு வலசை வரும் மீன்களும் உண்டு.
கடலில் வாழும் சால்மன், கழிமுக வாயில் கடந்து, நீர்வீழ்ச்சிகளில் மேலேறி, நதிமூலம் நோக்கிச் சென்று, பத்திரமான இடங்களில் முட்டையிடுகின்றன. பயணம் நெடுக தாய்-தந்தை சால்மன்கள் நீரருந்துவதில்லை, உணவருந்துவதும் இல்லை.
உடல் கறுத்து, மெலிந்து, களைத்துப்போகும் தந்தை சால்மோனின் இறுதிப் பயணம் அது. தாய் சால்மன் மட்டுமே கடலுக்குத் திரும்புகிறது. நன்னீர் விலாங்குகள் ஆற்றிலிருந்து ஆழ்கடலுக்குப் போய் இனப்பெருக்கம் செய்கின்றன. சால்மனுக்கும் விலாங்குக்கும் நினைவுகள்தான் ஜி.பி.எஸ்!
(அடுத்த வாரம்: பவளப் புற்றுகள்!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com