நா
ங்கள் தற்போது வசிப்பது இரண்டாவது மாடி - தரையிலிருந்து குறைந்தபட்சம் 20 அடி உயரத்துக்கு மேல்.
நீர்நிலைகளில் ஊசித்தட்டான்கள் முட்டையிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் மாடிவீட்டிலோ நீல நிறக் கதவுகள், நீல நிறச் சுவர்கள் தவிர, ஊசித்தட்டான் முட்டையிடுவது போன்ற பகுதிகள் எதுவுமில்லை. அதற்கான இரை அங்கே கிடைக்கிறதா என்பதும் எனக்குப் புரியவில்லை.
ஆனாலும், தினசரி இரண்டிலிருந்து ஐந்தாறு ஊசித்தட்டான்கள் எங்களைப் பார்க்க பறந்து மாடிக்கு வந்துவிடுகின்றன.
அப்படிப் பறந்துவருவது குட்டி ஊசித்தட்டான் என்பதை சமீபத்தில் தெரிந்துகொண்டேன். ஆங்கிலத்தில் Pygmy Dartlet, அறிவியல் பெயர் Agriocnemis pygmaea. அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் பார்க்கக்கூடிய இந்த ஊசித்தட்டான் இந்தியா, கீழ்த்திசை நாடுகள், ஆஸ்திரேலியா, பசிஃபிக் தீவுகளில் பரவலாகக் காணப்படுகிறது.
பச்சையும் கறுப்பும் கலந்த உடலைக் கொண்டது இந்த ஊசித்தட்டான். அதன் உடல் கண்டங்களின் கடைசிப் பகுதி செங்கல் நிறத்தில் காணப்படும். பெண் ஊசித்தட்டான்களின் உடல் சிவப்புத் தோற்றத்திலும்கூட இருக்கும். 16-18 மி.மீ. (2 செ.மீ.க்குள்) நீளம் கொண்டது.
சதுப்புநிலம், வயல், குளம், கடலோரம் ஆகிய பகுதிகளில் அதிகம் தென்படும். தரையை ஒட்டிக் கூட்டமாகப் பறந்து திரியும். வேகமாக அங்குமிங்கும் பறந்து சிறு பூச்சிகளை வேட்டையாடி உண்ணுமாம்.
புயல் காற்று வீசும் நேரம் விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வீடுகளுக்கு உள்ளேயும் செல்லும். ஆனால், எங்கள் வீட்டுக்கோ நாள்தோறும் வந்துசெல்லும் சிறப்பு விருந்தினராக இந்த ஊசித்தட்டான் இருக்கிறது.