கரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் ஆராயப்பட்டாலும் இன்னும் பல விஷயங்கள் ஆய்வுப் பொருளாகவே இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் நாட்டின் பால் வளம். இதைக் கருப்பொருளாகக் கொண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குஞ்சன் பண்டாரி, பிரியங்காலால் ஆகிய இருவரும் களமிறங்கிச் சில புள்ளி விவரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
கரோனா பொது முடக்கம் விலக்கப்பட்டதும் பசுக்களுக்கான செயற்கைக் கருவூட்டலில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் கண்டறிய இவர்கள் ஆய்வுசெய்யத் தொடங்கினர். நாட்டின் பசு கருவூட்டலுக்கான விந்து நிலையங்களில் விந்து விநியோகம் பாதிக்கப்பட்டது.
மேலும் இருப்பிருந்தவையும் ஊழியர்கள் இல்லாத காரணத்தால் பயன்படுத்தப்படாமல் வீணாகிவிட்டன. இதனால் இந்தக் காலகட்டத்தில் இந்திய அளவில் 34 சதவீத பசுக்களுக்கு செயற்கைக் கருவூட்டல் செய்ய இயலவில்லை. இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் மற்றோர் ஆய்வில் பொதுமுட்டக்கக் காலத்தில் 68 சதவீத பசுப் பராமரிப்பாளர்கள் செயற்கைக் கருவூட்டலை எதிர்கொள்வதில் சிக்கல் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கருவூட்டல் இடைவெளியால் ஒரு பசுவுக்கு ரூ.7,948.50 இழப்பு ஏற்பட்டுள்ளதாக குஞ்சன் பண்டாரி, பிரியங்கா லால் ஆகியோர் மதிப்பிட்டுள்ளனர். தேசிய அளவில் அந்தப் பாதிப்பு ரூ.824 கோடியாகும். 11 மாநிலங்களில் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நெல் கொள்முதல்: தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து 12.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுப் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான காலகட்டத்தில் அக்டோபர் 3ஆம் தேதி வரை செய்யப்பட்ட இந்தக் கொள்முதலால் இம்மூன்று மாநிலங்களில் உழவர்கள் 99,675பேர் பயனடைந்துள்ளனர்.
இந்தக் கொள்முதலின் மதிப்பு ரூ.2,689 கோடி என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது குறுவை சாகுபடி கடந்த ஆண்டைவிட அதிகப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சாகுபடியில் 521.27 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.