உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 61: முல்லை நில வேளாண்மை

பாமயன்

‘மாயோன் மேய காடுறை உலகு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.

காடு என்றவுடன் நமக்கு மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளும், அமேசான் காடுகளும் மனத்தில் நிழலாடும். முல்லைக் காடு என்பது அப்படிப்பட்ட மழைக் காட்டுப் பகுதி அன்று. அந்த இடம் மேய்ச்சல் காட்டுப் பகுதி, ஆயர் இன மக்கள் நிறைந்த, கால்நடைகள் நிறைந்த பகுதி.

முல்லைக் கலி ‘ஏறு தழுவுதல்’ பற்றிச் சிறப்பாகக் கூறும். முல்லை நிலத்தில்தான் கலப்பையின் வருகை தொடங்குகிறது. அந்தக் கலப்பைகூட எளிய கலப்பைதான்.

பெரும்பாணாற்றுப்படை என்ற நூல்,

‘பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்

களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்

குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி’(196-199)

- என்று தவசங்களைச் சேர்த்து வைக்கின்ற குதிர்களையும் கலப்பையையும் குறிப்பிடுகிறது.

பண்டைத் தமிழர்கள் கால்நடை எச்சங்களைச் சேர்த்து மட்கு எருக்களாகச் செய்துள்ளனர். இதற்கு ‘தாது எரு’ என்று பெயர். ‘தாதெரு மன்றங்கள்’, ‘தாதெரு மறுகுகள்’ முதலிய இடங்கள் இருந்துள்ளன. மலைபடுகடாம், அகநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. வேளாண்மைக்குப் பயன்படும் உரமாக இந்த எருக்கள் பயன்பட்டுள்ளன.

முல்லை நிலம் பெரும்பாலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் காணப்படுகிறது. இதைக் கொல்லைக் காடுகள் என்று கூறப்படும் வழக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் உண்டு.

முல்லை நிலத்தில் பண்ணையம் அமைக்கும்போது கால்நடைகளை அடிப்படையாகக்கொண்டு தொடங்க வேண்டும். மிக எளிய பண்ணையில் கோழி வளர்ப்பை முதன்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கோழி வளர்ப்பில் நாட்டுக் கோழி வளர்ப்பு சிறந்தது. நாட்டுக் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகம். அவற்றைத் திறந்தவெளியில் மேயவிட்டு வளர்ப்பது நல்லது.

தீனியை அவற்றுக்கு நாம் தனியாகக் கொடுக்க வேண்டாம். புழுக்களையும் பூச்சிகளையும் உண்டு நிலத்தில் நல்ல பூச்சிக் கட்டுப்பாட்டை அவை மேற்கொள்ளும். அவற்றுக்கு நல்ல புரத உணவும் கிடைக்கும். சிறிய அளவிலான வண்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அவற்றைக் கட்டுப்பாடாக இடம் விட்டு இடம் நகர்த்தியும் மேய விடலாம்.

கோழிகள் பிராண்டுவதில், அதாவது மண்ணைப் பறிப்பதில் சிறந்த திறன் கொண்டவை. நாம் ஆட்களை வைத்துக் களை எடுத்தால் எப்படி நிலம் இருக்குமோ, அதைவிடச் சிறப்பாக கோழிகள் களைகளை அகற்றும் திறன் கொண்டவை. எனவே நாம் விரும்பிய இடத்துக்குக் கோழிகளைச் சிறு வண்டி மூலம் கொண்டு சென்று வைத்தால், அவை களைகளை அகற்றுவதோடு நமக்கு முட்டைகளையும் வழங்கும், கூடவே வேலைக்குச் சம்பளமும் கேட்காது!

(அடுத்த வாரம்: மீன் தின்னும் கோழி!)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT