ஒரு வகைக் கறுப்பு வெள்ளை கரப்பான்பூச்சியை கிண்டி தேசிய பூங்காவின் உள்ளே இருக்கும் காட்டுப் பகுதியில் முன்னதாகவே பார்த்திருக்கிறேன். நகரத்துக்குள் சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஒரு காட்டுப் பகுதியில் தென்பட்ட இந்தப் பூச்சி, எங்கள் வீட்டிலும் தென்படும் என்று எதிர்பார்த்ததில்லை. ஆனால், ஆச்சரியப்படும் வகையில் ஒரு அக்டோபர் மாதத்தில் இந்தப் பூச்சி எங்கள் வீட்டிலும் தென்பட்டது.
இது ஆங்கிலத்தில் Domino Cockroach (Therea petiveriana) என்றும், ஏழு புள்ளி கரப்பான்பூச்சி என்று பொருள்படும் மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட வட்டமான வடிவில் இருக்கும் இந்த சிறிய பூச்சி கறுப்பு நிறம் கொண்டது. இறக்கையின் மேற்புறத்தில் ஏழு வெள்ளைப் புள்ளிகளுடனும் அடிப்பகுதி சிவப்பு நிறத்துடனும் இருக்கும். பெண் பூச்சியின் உணர்கொம்பு சற்றே சிறியது. 2.5 செ.மீ. நீளத்துடன் இருக்கும் இந்தக் கரப்பான் பூச்சி பார்க்க மிக அழகானது.
தென்னிந்தியாவில் காடுகள், தோட்டங்கள், மரங்கள் அடர்ந்த பகுதியில் வாழும் இந்தப் பூச்சி ஒரு அனைத்துண்ணி. குப்பைக்கூளங்களில் கிடைப்பதை உண்ணக்கூடியது.
பகலில் இலைச்சருகு, கடினமற்ற நிலப்பரப்பில் நிலத்துக்குள் அடையும். மண்ணுக்குள் வாழும். அதிகாலை, அந்தி நேரங்களிலும், ஈரமான தட்பவெப்பநிலையிலும் பொதுவாகத் தென்படுவதைப் பார்க்கலாம்.