உயிர் மூச்சு

முதல் நண்பன் 11: அழிந்து போனதா அலங்கு?

இரா.சிவசித்து

லகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய ‘டாக்ஸ்: தி அல்டிமேட் டிக்ஷனரி ஆஃப் ஓவர் 1,000 டாக் பிரீட்ஸ்’ என்ற புத்தகத்தில் அலங்கு நாய் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

1963-ல் வெளிவந்த ‘தி இந்தியன் டாக்ஸ்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில்தான் அலங்கு நாய் பற்றிய குறிப்பை, மோரிஸ் தனது புத்தகத்தில் கொடுத்திருக்க வேண்டும். இந்த இரு குறிப்புகளையும் தொகுத்தால், கீழ்க்கண்டவாறு அலங்கு நாயின் உடலமைப்புப் பற்றி ஒரு அறிமுகம் கிடைக்கும்:

‘இந்த நாய்கள் மிகக் குறைவான ரோமத்துடன் காணப்படுபவை. தஞ்சை, திருச்சி வட்டாரங்களைப் பூர்வீகமாகக் கொண்டவை. நன்கு இறங்கிய நெஞ்சும் தசைப்பற்றும் பெரிய உருவமுமாக தூக்கிய காதுகளுடன் இருக்கும்’.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல் என்னவென்றால் மேற்கூறிய இந்த இருவரது குறிப்புகளிலுமே அலங்கு நாய் இப்படி இருக்கும் என்ற ஒரு குறிப்புதான் இடம்பெற்றுள்ளதே தவிர, அது தொடர்பான எந்த சித்திரமோ அல்லது ஒளிப்படமோ இல்லை.

மோரிஸ் தந்த குறிப்புகளுக்கு ஏற்ப, தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு நாயின் சித்திரம் உள்ளது. எனவே, அந்த நாய்தான் சோழர்கள் காலத்து அலங்கு நாய் என்ற கருத்து பரவத் தொடங்கியது.

அந்தக் கருத்து பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து அலங்கு நாய்கள்தான் இன்றய புல்லி குட்டா நாயினங்களின் மூதாதையர்கள் என்பதுவரை நீள்வதைக் காணலாம்.

முதலில் புல்லி குட்டா நாய்களின் பூர்வீகம் இன்றைய பாகிஸ்தான், பஞ்சாப் என்பதைப் புரிந்துகொண்டாலே இது போன்ற அடிப்படைச் சந்தேகங்களைத் தவிர்த்து விடலாம்.

இது ஒருபுறமிருக்க, அலங்கு நாய்கள் சோழர் காலத்தில் அதிக அளவில் இருந்ததென்றும் பின்னர் காலப்போக்கில் மற்ற இனங்களுடன் கலந்து அழிந்து போனதென்றும் கூறும் தரப்பினரும் உண்டு. முதலில் அலங்கு நாய் என்ற இனம் உண்மையிலேயே இருந்ததா?

இதைப் பற்றி அறிவதற்கு, அந்த இனத்தை முதலில் யார் எப்போது பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். 1962-க்கு முன்னர் அலங்கு நாய் என்ற இனம் எங்கும் பதிவு செய்யப்படவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் 200 ஆண்டுகளுக்கு முன்புகூட நாயினங்களுக்குப் பெயரிடும் முறை நம்மிடம் இல்லை.

சங்க இலக்கியங்களில் அலங்கு என்ற சொல் அசைதல், மின்னுதல், பூத்தல், அழகு போன்ற பல பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் நாய்களைக் குறிக்கவில்லை. தமிழில் மூத்த சூழலியல் எழுத்தாளரான தியடோர் பாஸ்கரனிடம் இதைப் பற்றிக் கேட்டபோது “1968-களிலேயே தஞ்சை வட்டாரங்களில் விசாரித்திருக்கிறேன். அப்படி ஒரு நாய் இருந்ததற்கான எந்தத் தகவலும் இல்லை. அலங்கு என்பது சிறிய வகை எறும்புத்தின்னியைக் குறிக்கும் சொல்” என்றார்.

தென்மாவட்டங்களில் எறும்புத்தின்னியை அலங்கு என்றே குறிப்பிடுகின்றனர். மேலும் சோழர் காலத்து வரலாற்றை எழுதிய எந்த வரலாற்றாசிரியரும் அலங்கு என்ற நாய் இனம் இருந்ததாகவோ, அது சோழர்களால் பேணி வளர்க்கப்பட்டதாகவோ பதிவு செய்யவில்லை. ஆக, தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள சித்திரம் ஒரு நாயினது படம் என்று சொல்லலாமே தவிர, சோழர்கள் வளர்த்த அலங்கு நாய் என்றோ, அப்படி ஒரு இனம் இருந்து அழிந்து போனதென்றோ உறுதியாகக் கூறுவதற்கில்லை.

(அடுத்த வாரம்: ‘செங்கோட்டை’ சரித்திரம் )
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

SCROLL FOR NEXT