உயிர் மூச்சு

மாற்றுப் பயிருக்கு மாற வேண்டும்

விபின்

சமீப காலமாகக் குறைந்துவரும் மழைப்பொழிவால் பிஹார் மாநிலத்தின் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுவருகிறது. பிஹாரின் சில பகுதிகளில் மழை பெய்தாலும் ஆறு மாவட்டங்களில் மழைப் பொழிவு ஆகஸ்ட் மாதத்தில் ஏமாற்றமளித்தது. இதனால் நடவு தடைபட்டது. கயா, நவாடா, ஔரங்காபாத், ஷேக்புரா, ஜமுய், நாளந்தா ஆகிய மாவட்டங்களில் நடவுப் பணிகள் போதிய அளவு மழை பெய்யாததால் பாதிக்கப்பட்டன.

முதல்வர் நிதிஷ் குமார் ஆகஸ்ட் 19 அன்று வான்வழி ஆய்வு நடத்தி, பாசனத்திற்காக விவசாயிகளுக்கு 16 மணி நேரம் தடையின்றி மின்சாரம், டீசல் மானியம் உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆண்டு 3.59 மில்லியன் ஹெக்டேர் நெல் சாகுபடி என்பது பிஹார் அரசின் இலக்கு.

ஆனால், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் 3.35 மில்லியன் ஹெக்டேரில் மட்டுமே நடவுசெய்ய முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. மாநில வேளாண் துறைச் செயலர் சஞ்சய் குமார் அகர்வால், “மக்காச்சோளம் போன்ற குறைந்த நீர் தேவைப்படும் மாற்று வகைப் பயிர்களை விவசாயிகள் தேர்வுசெய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி அப்துஸ் சத்தார், “மாறிவரும் காலநிலை காரணமாக மாநிலத்தில் மழைப்பொழிவு மாறியுள்ளது. இந்நிலை தொடரும். சம்பா சாகுபடி பாதிக்கப்படும். இதனால் விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டியது அவசியம்” எனக் கூறியுள்ளார்.

பன்றிக் காய்ச்சல் தீவிரம்

விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு (WOAH) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஆப்ரிக்கப் பன்றிக் காய்ச்சல் ஜனவரி 2021 முதல் 49 நாடுகளில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கிறது. 2021 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 15 லட்சம் விலங்குகள் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. ஒன்பதரை லட்சம் பன்றிகளும் 28,000 காட்டுப் பன்றிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களைவிட இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த நோய் முதலில் கென்யாவில் 1921இல் பதிவாகியுள்ளது. இந்த ஆப்ரிக்கப் பன்றிக் காய்ச்சல் வைரஸைக் கட்டுப்படுத்த எந்தச் சிகிச்சையும் இல்லை. பாதிக்கப்பட்ட பன்றிகளை அழித்துச் சுண்ணாம்பு தடவிய ஆழமான குழிகளில் புதைப்பதே அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி.

இந்தியாவில் ஜனவரி 2020 இல் அசாமில் முதன்முதலில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. பிஹார், கேரளம், பஞ்சாப், ஹரியாணா, குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் இந்நோய் பரவியது. கடந்த வாரம் கேரளத்தில் இந்த நோய்ப் பாதிப்புக்கு ஆயிரக்கணக்கான பன்றிகள் உயிரிழந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த பன்றி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT