2017-ம் ஆண்டு விடைபெற இருக்கும் தறுவாயில், சர்வதேச அளவில் இந்த ஆண்டு சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி ஒரு மீள்பார்வை இங்கே…
கடலுக்காக… முதல் மாநாடு
பெருங்கடல்களைக் காப்பாற்றும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் மன்றம் முதன்முறையாக சர்வதேச அளவில் ‘பெருங்கடல் மாநாடு’ ஒன்றை இந்த ஆண்டு நடத்தியது. மாசுபாடு, பூமி சூடாதல் போன்ற பல்வேறு காரணங்களால், கடலின் தாங்கும் சக்தி (கேரியிங் கபாசிட்டி) கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவதாக அந்த மாநாட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, 2030-க்குள் உலகில் உள்ள பெருங்கடல் பரப்புகளில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தையாவது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.
அழியும் ஒட்டகச்சிவிங்கி
ஆப்பிரிக்கக் கண்டத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று, ஒட்டகச்சிவிங்கி. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் (ஐ.யூ.சி.என்), ஒட்டகச்சிவிங்கியை அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் (ரெட் லிஸ்ட்) சேர்த்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 40 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்தச் சங்கம் கூறுகிறது. 1985-ல் ‘நல்ல நிலையில் உள்ள உயிரினம்’ (லீஸ்ட் கன்சர்ன்) என்ற நிலையிலிருந்து ‘அழிவுக்கு உள்ளாகக்கூடிய உயிரினம்’ (வல்னரபிள்) என்ற நிலையை அடைந்து, தற்சமயம் ‘முற்றிலும் அழிந்துபோகும் நிலையில் உள்ள உயிரினம்’ (எக்ஸ்டிங்ஷன்) எனும் நிலையை அடைந்துள்ளது.
குறையும் பனிக்கட்டிப் பரப்பு
எப்போதும் இல்லாத அளவுக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிப் பரப்பு மிகவும் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பனித் தரவு மையம் தகவல் வெளியிட்டது. 2.26 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவுக்கே பனிக்கட்டிப் பரப்பு இருந்ததாகக் கூறப்பட்டது. இதற்குக் காரணம்… வேறென்ன, பருவநிலை மாற்றம்தான்! அதேபோல உலக அளவில் கார்பன் மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் அளவு இந்த ஆண்டு மிகவும் உயர்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புகை அதிகரித்தால் வெப்பம் அதிகமாகும். வெப்பம் அதிகமானால் பனி உருகத்தானே செய்யும்?
ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா
2015-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டின்போது, அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலை இந்த நூற்றாண்டுக்குள் 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக வைத்திருக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்ற ஒப்பந்தம் முடிவானது. அதிலும், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது. இதை நிறைவேற்றப் பல நாடுகளும் முயன்றுவரும் வேளையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்த ஆண்டின் மத்தியில், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது. இது பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மவுசு குறைந்த நிலக்கரி
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக அளவில், நிலக்கரிக்கான மவுசு குறைந்தது. 2016-ல் உலக அளவிலான நிலக்கரிப் பயன்பாடு 53 மில்லியன் டன் ஆகக் குறைந்தது. அதிலும் சீனா மற்றும் அமெரிக்காவில்தான் நிலக்கரியின் பயன்பாடு குறைந்திருக்கிறது. இன்னொரு புறம், உலக அளவிலான நிலக்கரி தயாரிப்பு 6.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.