இ
ன்றைய அவசர உலகத்தில், துரித உணவை உண்ண வேண்டிய நிர்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக நீரிழிவு, இதய நோய் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் பாரம்பரிய இயற்கை உணவு குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ‘கிரியேட்’, ‘மண் வாசனை’ ஆகிய அமைப்புகளின் சார்பில் பாரம்பரிய அரிசி உணவுத் திருவிழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. பாரம்பரிய நெல் ஆர்வலர் மறைந்த பா.திலகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 100 வகை பாரம்பரிய அரிசிகளைக் கொண்டு பாரம்பரிய உணவு சமைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திருநங்கைகளும் பங்கேற்று பாரம்பரிய உணவைச் சமைத்தனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பணியைத் துறந்த அவர், பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பயணித்தார். பின்னர் பாரம்பரிய நெல் ரகங்களைச் சந்தைப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து, விலையையும் அவர்களையே நிர்ணயிக்க வைத்தார். மேலும் பாரம்பரிய அரிசி மூலமாக தோசை மாவு, இடியாப்ப மாவு உள்ளிட்ட மதிப்புக்கூட்டுப் பொருட்களை உருவாக்கி, விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டப் பாடுபட்டார். அண்மையில் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்தார்” என்றார். திலகராஜனின் பிறந்த நாளான நவம்பர் 25-ம் தேதி, அவர் அதிகம் நேசித்த 100 பாரம்பரிய அரிசி வகைகளைக்கொண்டு பாரம்பரிய உணவு சமைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் பேசும்போது, “நமது உணவின் பாரம்பரியம் காக்கப்பட கைக்குத்தல் அரிசியை உண்ண வேண்டும். தவிடு நீக்காத அரிசியைத்தான் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க வேண்டும். அரிசி ஆலைகளில் தவிடு நீக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி பேசும்போது, “நியாயவிலைக் கடைகளில் பாரம்பரிய கைக்குத்தல் அரிசி வகைகளை வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நியாயவிலைக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் டன் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதில் 25 சதவீத கடைகளுக்கு தலா 100 கிலோ கைக்குத்தல் அரிசியை அனுப்புவதற்குத் தேவையான பாரம்பரிய அரிசி விளைச்சலும் இல்லை, விளைவிக்கும் விவசாயிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகோ கம்போ கொடுத்தாலும்கூட, அரிசி உணவு சாப்பிடுவதையே மக்கள் கவுரவமாக நினைக்கின்றனர்” என்றார்.
‘நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஸ்ரீதர் பேசும்போது, “மத்திய அரசின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கைக்குத்தல் அரிசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பான அம்சங்கள் உள்ளன. அடுத்து வந்த ஐந்தாண்டுத் திட்டங்களில் அதுபோன்ற அம்சங்கள் இடம்பெறவே இல்லை.
பாரம்பரிய நெல் வகைகளில் 8 சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியவை. அதை வெளிக்கொணர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பயன்படுத்தப்படும் அரிசியில் மாவுச்சத்து மட்டுமே உள்ளது. அதை உண்பதால் நீரிழிவு நோய்தான் வரும். துரித உணவு வகைகளை உண்பதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதிலிருந்து மீள இயற்கை வேளாண் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.
பாரம்பரிய நெல் பாதுகாவலர் ‘நெல்’ ஜெயராமன் பேசும்போது, “இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் இருந்துள்ளன. பசுமைப் புரட்சியால், நமது பாரம்பரிய நெல் வகைகள் பிலிஃபைன்ஸ் உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், ஒடிசா மாநிலம் கட்டாக்கிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாரம்பரிய ரகங்களிலிருந்துதான் தற்போது ஒட்டுரகப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று பெரும் சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க, பாரம்பரிய நெல் ரகங்களால் மட்டுமே முடியும். அதற்காகவே, சுமார் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை, சுமார் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறோம். பாரம்பரிய அரிசி உணவு நுகர்வோரைச் சென்றடையவே, இந்தப் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.
இதை மாநிலம் முழுவதும் பரப்ப, அரசு சார்பில் இயற்கை வேளாண் கொள்கையை உருவாக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
மேனகா தொடர்புக்கு: 9884166772