உயிர் மூச்சு

முதல் நண்பன் 13: தமிழர் மரபில் நாய்கள்!

இரா.சிவசித்து

மது மரபில் நாய்களுக்கான இடம் என்பது, மிகவும் கீழானது. இன்று வரையிலும் நம்மிடையே மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ள வசைச்சொற்களில் முதன்மையானது ‘நாய்’ என்பதாகத்தான் இருக்கும்!

பண்டைய காலங்களில் பொருளாதாரம், கல்வி அடிப்படையில், உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமே நாய்கள் மிகவும் கொண்டாடப்பட்டன என்று நினைத்தால் அது தவறு!

மாணிக்கவாசகர் தன்னை ‘நாயினும் கடையேன்’ என்கிறார். கடந்த கட்டுரைகளில் நாம் பார்த்த நாய் இனங்களின் வருகைக்கு முன்பு, தமிழகத்தில் நாய்கள் பற்றிய மதிப்பீடு இவ்வளவுதானா?

இன்றைய ‘இண்டிஜீனஸ்’ என்று சொல்லப்படும் உள்ளூர் இனங்களின் வருகைக்கு முந்தைய நாய்கள் எவை? கடந்த நானூறு ஆண்டுகளாக நமக்கு அறிமுகமான நாய்கள் அத்தனையையும் தவிர்த்துவிட்டுத்தான் புராதன நாய்களை, நாம் இனம் காண வேண்டியுள்ளது. அப்போது எஞ்சுவது எதுவோ, அதுவே நம் மரபில் சொல்லப்பட்டு வந்த நாய்.

கிட்டத்தட்ட உலகம் முழுவதும் மேய்ச்சல் சமூகங்களும், வேட்டுவக் குடிகளும்தான் பல நூற்றாண்டுகளாக நாய்களுடன் பயணித்தனர். நாய்களை நமது பழந்தமிழ் இலக்கியங்கள் ஞமலி, ஞாளி என்று கூறுகின்றன. மேலும் சினமுற்ற வேட்டை நாய்களை ‘கதநாய்’ என்றும் குறிப்பிட்டுள்ளன.

‘சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்’

என்ற பெரும்பாணாற்றுப்படை வரி, வேட்டுவக் குடிகளான எயினர் இன மக்கள், நாய்களைக் கொண்டு வேட்டையாடிய ஊன் உணவைப் பற்றிக் கூறுகிறது.

‘கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்’ என்ற புறப்பாடல் வரி, கானகத்து வாழ் வேட்டுவனையும், அவனோடு இணைந்து வாழ்ந்த நாயையும் குறிக்கிறது. குறிஞ்சி நிலத்தில் வேட்டைக்குப் பயன்பட்ட நாய்கள்தான், பின்னர் மெல்ல மருத நிலத்து மக்களால் ஆநிரை காவலுக்குப் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறான நாய்கள்தான் ‘பட்டி நாய்கள்’ என்று பெயர்பெற்றன.

‘தி புக் ஆஃப் இந்தியன் டாக்ஸ்’ என்ற புத்தகத்தில் சு. தியடோர் பாஸ்கரன், நடுகல் ஒன்றைக் குறிப்பிடுகிறார். நடுகல், எளிய மக்களின் வழிபாடுகளில் ஒன்று. அது 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எடுத்தானூர் நடுகல்லைப் பற்றியது.

ஆநிரைகளைக் காக்க, கள்வர்களுடன் போரிட்டு உயிர்விட்ட வீரனுக்கும் அவனுடைய நாய்க்குமானது அந்த நடுகல். இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று, நாயினது பெயர் ‘கோவன்’ என்பதுகூட அந்த நடுகல்லில் பதிவாகியுள்ளது என்பதுதான்!

வட வேங்கடத்தின் அப்பால் உள்ள வேட்டை நாய்களைக்கூட நமது இலக்கியங்களில் காண முடிகிறது. 1975-ல் காட்டுயிர் ஆர்வலர் மா.கிருஷ்ணன், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மடத்துக் கோயில் ஒன்றைப் பார்வையிட்டார். அங்கு, ‘கல்லா நீண்மொழிக் கத நாய் வடுகர்’ என்று ஒரு வரி தென்பட்டிருக்கிறது. அதைப் பார்த்த கிருஷ்ணன், அதை ஒளிப்படம் எடுத்ததுடன், அங்குள்ள பைரவர் சிலையையும் ஒளிப்படம் எடுத்தார்.

அதில் உள்ள நாயின் உடலமைப்பை விவரித்து, இவை நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய உள்ளூர் இன நாய்தான் என்று கூறியுள்ளார். வரலாற்றுத் தன்னுணர்வோடு கூறிய கருத்தாக அது அமைந்தது. இன்றுவரையிலும் நமது கிராமத்துக் குலதெய்வமான ‘போதவெறி காளை பொண்ணுவேரியன்’ தொடங்கி, கண்மாய்களிலும் ஊர் எல்லைகளில் வெற்று உடம்புடன் நிற்கும் காவல் தெய்வங்களின் கைகளில் இருப்பதுவரை, இந்த நாட்டு நாய்கள்தான்!

(அடுத்த வாரம்:

கன்னி நாய்களுக்கு ஆபத்து?)

கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு:

sivarichheart@gmail.com

SCROLL FOR NEXT