இ
டுப்பில் பச்சை வேட்டி, சட்டையில்லாத வெற்றுடம்பு, பாசாங்கற்ற பளீர் சிரிப்பு, யாருடனும் எளிதாக உரையாடும் இயல்பு. இதுதான் நம்மாழ்வாரிடம் என்னை நெருங்க வைத்தது. பார்த்த உடனே சாப்பிட்டுக்கொண்டிருந்த கொய்யாப்பழத்தைப் பாதியாய் நறுக்கித் தந்து, நெகிழச் செய்தது!
“சாப்பிடுங்க... ஆப்பிள் பழத்தைவிட இதில் சத்து அதிகம். நமது மண்ணில் விளையும் ஒரு நெல்லிக்கனியைவிட ஊட்டச்சத்து மிக்க பழத்தை இறக்குமதி செய்ய முடியாது! எள்ளில் ஆட்டி எடுக்கும் நல்லெண்ணையைவிட பன்னாட்டு கம்பெனிக்காரன் கூவிக்கூவி விளம்பரப்படுத்தும் ஆலிவ் எண்ணெயில் ஒன்றுமில்லை! இப்போதிருந்தே துரித உணவைக் கைவிடுங்கள். அவசர கதியில் ஆக்கிக்கொட்டும் இந்த உணவால் நம்ம நிலத்துக்கும் கேடு! உங்கள் உடம்புக்கும் கேடு!” என்றார்.
முதல் சந்திப்பில் ஒருவருடன் ‘உணவு அரசியலை’ இவ்வளவு எளிமையாக யாரும் பகிர்ந்துகொள்ள முடியாது.
நம்மாழ்வார், தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர். கற்றதை எளிய விவசாயிகளுக்குப் புரியும் மொழியில் உரைத்தார். புத்தகங்கள் பல எழுதியவர். அவரின் சிந்தனையும் செயல்பாடும் படித்த இளைஞர்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியுள்ளது. இன்று தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதில் நம்மாழ்வரின் முப்பதாண்டு கால உழைப்பு உள்ளது.
அவர் தொடங்கிய ‘வானகம்’ எனும் அமைப்பு, உயிர்ச்சூழல் நடுவமாய் உலக உணவுப் பாதுகாப்புக்கான பண்ணை ஆராய்ச்சி மையமாய் செயல்பட்டுவருகிறது. பட்டுக்கோட்டை அருகேயுள்ள பிச்சினிக்காடு கிராமத்தில் மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தச் சென்றிருந்தபோது, உடல் நலக்குறைவால் நம்மாழ்வார் இயற்கையோடு இணைந்தார்.
சுற்றுச்சூழல், இயற்கை வழி வேளாண்மை ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டுமெனில் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உழைக்கும் மக்களை இணைத்துப் போராடுவதன் மூலமே நம்மாழ்வாரின் கனவுகளை நனவாக்க முடியும்.
மற்றபடி மண்ணில் நெளியும் ஒரு புழுவில், பறக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகில், பறந்து திரியும் ஒரு பறவையின் குரலில் நம்மாழ்வார் எப்போதும் இருப்பார்!
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: kurinjisadhasivam@gmail.com