வெ
ளிச்சம் பாய்ச்சும் கடலை நீங்கள் பார்த்ததுண்டா?
‘அவதார்’ திரைப்படத்தில் வெளிச்சத்தை உமிழும் உயிரினங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளை வேண்டுமானால் பார்த்திருக்கலாம்.
என் சிறு வயதில் இரவில் கடலுக்குள் போகும் அப்பாவுக்குக் குற்றேவல் புரிந்த அனுபவம் உண்டு. ஆண்டின் குறிப்பிட்ட பருவங்களில் பின்னிரவுப் பொழுதில் ‘ஆர்ச்ச வளைப்பு’ என்னும் மேல்கடலில் விரிக்கும் வலையுடன் அப்பா கடலுக்குப் புறப்படுவார். அப்போதெல்லாம் கடல்புகும் காலத்தைத் தீர்மானிப்பது பொழுதுகள் என்பதைவிட, ‘கவர் எழுப்பம்’, ‘கவர் அடக்கம்’ என்கிற கடல் ஒளிர்ந்து தணியும் காலம் என்பதே சரி.
நிலா வெளிச்சம் துப்புரவாக இல்லாதிருக்கும் முன்னிரவுப் பொழுதில் கரைக்கடல் பரப்பு முழுவதிலும் வெள்ளி உருகி வழிவதுபோல ஒளிர்ந்துகொண்டிருக்கும் கண்கொள்ளாக் காட்சி. பருவம்தோறும் மீன் கூட்டங்கள் கரைக்கு வருவதன் முன்னறிவிப்பாக ‘தேத்து’ என்னும் கடல் நிற மாற்றம் வருகிறது.
தேத்து காலத்தின் பின்னிரவில் கவர் ஒளிர்ந்து தணிந்த பிறகுதான் வலையில் மீன் பிடிபடும். கவர் வெளிச்சத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் வலைக்கண்ணிகளிலும் ஒட்டிக்கொள்ளுகின்றன. வலை முழுவதும் நியான் ஒளிக்கோடுகள்போல நீலப்பச்சை நிறத்தில் ஒளிரும்போது மீன்கள் வலையை அடையாளம் கண்டு தப்பித்துக்கொள்ளும். கவர் வெளிச்சம் அடங்கிய பிறகுதான் வலைகளில் மீன்பாடு!
இரவில் கடல்புகும் கட்டுமரங்கள் எளிதாக அலையைக் கடக்க உதவுவது, இந்த ஒளி உமிழும் நுண்ணுயிரிகள்தான். கடல் ஒளிரும் காலத்தில் கரைநோக்கி சீறிவரும் அலைகளை அடையாளம் காட்டுவது இந்த உயிர் வெளிச்சமே.
மின்மினிப் பூச்சிகள் நமக்குப் பரிச்சயமானவை. கும்மிருட்டு வெளியில் நகரும் சிறு நட்சத்திரங்களாகத் திரியும் இந்தப் பூச்சிகள் ஒளியின் மொழியில் பேசிக்கொள்கின்றன. இணையைக் கண்டடைகின்றன.
கடல் சூழலியலில் புழுக்கள், கணுக்காலிகள், சொறி மீன்கள், நட்சத்திர மீன்கள், சில சுறாக்கள் உள்ளிட்ட மீனினங்கள் ஒளி உமிழும் உறுப்புகள் கொண்டவை. ‘நாட்டிலுகா’ போன்ற ஒரு செல் உயிரிகளும் சில பாசி வகைகளும்கூட ஒளி உமிழ்பவை. சில ஒளிரும் கடற்புழு இனங்கள், கடல் ஏற்றவற்றப் பகுதியில் வாழ்வன.
இவை குறிப்பிட்ட பருவகாலத்தில் கடலின் மேற்பரப்பில் கார்த்திகை தீபம் ஏற்றியதுபோல திரளாக ‘கல்யாண ஊர்வலம்’ போகும். வெளிச்சம் துளிகூட எட்டாத பேராழக் கடல்களில் வாழும் மீனினங்களில் சில ஒளி உமிழும் உறுப்புகளைக் கொண்டவை.
உணவு சேகரிக்க, வேட்டையாட, எதிரியின் கவனத்தைத் திசைத் திருப்ப, இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்க்க… இப்படிப் பல நோக்கங்களுக்கு இந்த ஒளி உமிழும் உறுப்புகள் உதவுகின்றன.
(அடுத்த வாரம்: சிற்றுயிரின் பெரும் சேவை)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com