உயிர் மூச்சு

கடலம்மா பேசுறங் கண்ணு 28: உவர்ப்பு என்னும் வரம்!

வறீதையா கான்ஸ்தந்தின்

வே

தித் தூய்மை கொண்ட நீர், உயிர்கள் வாழும் தகுதியற்றது. இயற்கையான நீர்நிலையிலிருந்து ஒருகை நீரை அள்ளி அதைக் கூர்ந்து பாருங்கள்… அது ஒரு சூப்!

கடல் என்னும் உப்பு நீர்த்திரள் தனித்துவமான வேதிப் பண்புகள் கொண்டது. நீரின் வேதிப் பண்புகளுக்கு அப்பால் கடல் மூன்று தனிக்கூறுகளால் அமைகிறது. ஒன்று, நிலத்தின் மீது கிடப்பது. இரண்டு, தரைப் பரப்பின் தாக்கங்களை எதிர்கொள்வது. ‘செம்புலப் பெயல் நீர்போல்’ என்னும் உவமை சுட்டுவதுபோல, நீரின் தன்மை அது சார்ந்திருக்கும் நிலத்தைப் பொறுத்ததும்கூட. மூன்றாவது, புவிப் பரப்பின் மூன்றில் இரண்டு பகுதியை மூடிக்கிடக்கும் கடல் வளிமண்டலத்துடன் தடையற்ற தொடர்பில் இருப்பது.

கடலின் மொத்த கன அளவு 137 கோடி கன கிலோமீட்டர். இத்தனைப் பெருக்கம் கொண்ட இந்நீர்த்திரளின் முதன்மை வேதிக்கூறு உவர்ப்பு. 3.5 சதவீத உப்பு. ‘உவர்நீர்க் கோளம்’ என்று பூமியை அழைப்பது சாலப் பொருத்தம். உப்பைக் குறித்துத் தனியொரு அத்தியாயத்தில் பேசலாம்.

உயிர்வளி, நீர்வளி, குளோரின் போன்ற 12 வாயுக்கள் உள்ளிட்ட 60 தனிமங்கள் கடல்நீரில் கரைந்துள்ளன. இவை தவிர கடல் நீரின் மூன்று பண்புகள் கடலுக்குத் தனித்தன்மையைத் தருகின்றன. முதலாவது, வேறெந்தக் கரைப்பானையும்விட அதிக எண்ணிக்கையிலான வேதிமங்களைக் கரைக்கும் திறன்கொண்டது நீர். இரண்டு, நீரின் வெப்பக் கொள்திறன் இயல்பிலேயே அதிகமானது. மூன்று, உறைநிலையில் விரிவடையும் அபூர்வமான திரவம் நீர். இம்மூன்று பண்புகளுடன் கடலின் உவர்தன்மையும் இணைந்து பல சிறப்புப் பண்புகளுக்குக் காரணமாகிறது.

கடல், தோன்றிய காலத்தில் உவர்நீராய் இருந்திருக்க வாய்ப்பில்லை. தொல்லியல் காலம் தொடங்கி கடலின் உவர்ப்பு, படிப்படியாக உயர்ந்திருக்க வேண்டும். நீராவியாதலின் மூலம் கடற்பரப்பிலிருந்து நீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. மழை வெள்ளம் நிலத்தில் ஓடிக் கடலைச் சேர்கையில் அதிகமான உப்பைக் கொண்டு சேர்க்கிறது. ஆண்டுதோறும் 2.7 லட்சம் கனகிலோமீட்டர் மழைவெள்ளம், கடலில் கொண்டு சேர்க்கும் உப்பின் அளவு நான்கு கோடி டன்.

நீர், உறைந்து திடநிலை அடையும்போது அடர்த்தி குறைந்து, விரிவடைந்து மேலே மிதக்கிறது. கடலின் இந்த அற்புதமான பண்புதான் தன் வெம்மையைத் தக்க வைத்துத் தனக்குள் புழங்கும் உயிர்களை வாழவைக்கிறது. பனிப்பாறைகள் உடைந்து கடல் நீரோட்டங்களின் திசையில் நகர்ந்து போகும்போது நிலநடுக்கோட்டுக்கும் துருவங்களுக்கும் இடையில் கடலின் வெம்மையையும் உவர்ப்பையும் தணித்து சமநிலை பராமரிக்கிறது.

கடலின் உவர்ப்புதான் உயிர்க்கோளத்தின் பெருவரம் என்று சொல்ல வேண்டும். சூரிய வெப்பத்தால் பெருங்கடல் பரப்பின் குறிப்பிட்ட பகுதி விரிவடைய நேரும்போது அடர்த்தி வேறுபாடு ஏற்படுகிறது. வெதுவெதுப்பான, அடர்ந்த்தி குறைந்த கடல் நீர்த்திரளானது வெம்மையும் அடர்த்தியும் குறைவான பகுதியை நோக்கி விரைகிறது. கடலின் உவர்தன்மையில் விளையும் இம்மாற்றம்தான் பெருங்கடல் நீரோட்டங்களின் அடிநாதம்.

கடல்நீர் நன்னீராக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, நீரோட்டங்கள் நிகழாது. உயிர்கள் பரவிப் பெருகாது. உயிர்ச்சத்து விநியோகம் நிகழாது. கடல்நீரைக் குடிக்கவோ விவசாயத்துக்குப் பயன்படுத்தவோ முடியாதுதான். ஆனால், கடலின் உவர்ப்புப் பண்பு மிக முக்கியமானது.

கடலில் கரைந்திருக்கும் உப்பின் அளவு என்ன? ஒரு கனகிலோமீட்டர் கடல்நீரைக் காய்ச்சினால் நான்கு கோடி டன் உப்பைப் பெறலாம். கடலிலிருந்து உப்பை எடுக்கலாம் என்னும் வரலாற்று உண்மையை மனிதகுலம் அறிந்துகொள்வதற்கு முன்னால், உப்புக்காகப் போர்கள் நிகழ்ந்தன. தங்கத்துக்கு நேர்விலையாக உப்பு விற்கப்பட்டது.

ஊதியத்துக்கு நேரான ‘salary’ என்கிற சொல்லின் வேர்ச்சொல் ‘salarium’. இந்த லத்தீன் சொல்லின் பொருள் ‘உப்பு’ என்பது. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்னும் பழமொழிக்குச் சரியான பொருளை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

கடலுக்கு இருப்பதுபோல் உப்புக்கும் இருக்கிறது ஒரு நெடிய வரலாறு!

(அடுத்த வாரம்: ஒளிரும் கடல்)

கட்டுரையாளர்,

பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: vareeth59@gmail.com

SCROLL FOR NEXT