உயிர் மூச்சு

கான்கிரீட் காட்டில் 10: அப்படியென்ன அவசர வேலை?

ஆதி வள்ளியப்பன்

எங்கள் வீட்டுக்கு வெளியே தரைப் பகுதியில் சிவப்பு நிறப் பூச்சி ஒன்று அதிவேகமாக ஊர்ந்து சென்றுகொண்டிருப்பதை அடிக்கடி பார்க்க முடியும். சில நேரம் தனியாகவும் பெரும்பாலும் கூட்டமாகவும் ஏதோ அவசர வேலையை முடிக்கப் போவதுபோல ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் பூச்சியைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

முதன்மையாகச் சிவப்பு, முதுகில் எதிரெதிராக இரண்டு கறுப்பு முக்கோண முத்திரைகளுடன் 2 செ.மீ. நீளம் கொண்ட பூச்சி அது. இவற்றில் பெண் பூச்சி உடல் அளவில் பெரிது. ஆண்-பெண் பூச்சிகள் இணைசேர்ந்த நிலையில் நகர்ந்துகொண்டிருப்பதையும் சாதாரணமாகப் பார்க்கலாம். அதிவேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

நாடெங்கும் வாழும் இந்தப் பூச்சி மரம் நிறைந்த பகுதிகள், காட்டின் விளிம்புகள், இலைச்சருகுகள் அருகே அதிகம் தென்படும். அனைத்துண்ணி. சில நேரம் தன்னினத்தையே உண்ணவும் செய்யுமாம்.

25CHVAN_CottonStainer__2_.jpg

இந்த இனப் பூச்சிகளில் சில வகைகள் வேளாண்மையை பாதிக்கக்கூடியவை. இவை பருத்திக் காய்களை உண்பதால், வெடிக்கும் பருத்தியில் மஞ்சள்பழுப்புக் கரையேறிவிடும். அதனால்தான் ஆங்கிலத்தில் ‘கரையேற்படுத்தும் பூச்சி’ என்று பொருள்படும் வகையில் இது அழைக்கப்படுகிறது. Dysdercus பேரினத்தைச் சேர்ந்த இந்த இனப் பூச்சி, ஆங்கிலத்தில் Cotton Stainer என்றழைக்கப்படுகிறது.

பீநாறி, குதிரைபிடுக்கன் (Sterculia foetida) என்றழைக்கப்படும் மரத்தின் கடினமான ஓடுகளைக்கொண்ட காய்கள், விதைகளால் இந்தப் பூச்சி பெரிதும் ஈர்க்கப்படும். எங்கள் வீட்டுக்கு அருகில் இந்த மரம் இருப்பதே, இந்தப் பூச்சிகள் அங்கே பல்கிப் பெருகுவதன் ரகசியம் என்பது பின்னால்தான் எனக்குப் புரிந்தது.

SCROLL FOR NEXT