உயிர் மூச்சு

ஏரிகளிலும் ஞெகிழி

நிஷா

உலகின் சில ஏரிகளில் ஞெகிழிக் கழிவின் அடர்த்தி, கடல்களின் மிகவும் அசுத்தமான பகுதிகளைவிடக் கூடுதலாக உள்ளது எனச் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நன்னீர் ஏரிகளில் உள்ள ஞெகிழி கழிவு குறித்த ஆய்வு அது. உலகளாவிய அறிவியலாளர்கள் குழு ஒன்றால், 6 கண்டங்களில் உள்ள 23 நாடுகளின் 38 ஏரிகளில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவுகள், ஞெகிழி கழிவுகள் நமது பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளை எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளன என்பதை உணர்த்துவதுடன், எத்தகைய ஆபத்தான சூழலில் நாம் வாழ்கிறோம் என்றும் நம்மை எச்சரிக்கிறது. மனிதர்களின் இருப்புக்கு ஏரிகளின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

ஏற்கெனவே, பாசிகள், ஆக்கிரமிப்பு, வறட்சி போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், ஞெகிழி மாசுபாடு நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கூடுதல் அச்சுறுத்தலாகச் சேர்ந்திருக்கிறது.

70,000 டன் வேதிக் கழிவு: பூச்சிக்கொல்லி மருந்துகளிலிருந்து வெளிவரும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் விளைநிலங்களைச் சுற்றியுள்ள நிலத்தையும் தண்ணீரையும் மாசுபடுத்துவதுடன் நிற்பதில்லை; அவை ஆறுகளையும் கடல்களையும் சென்றடைவதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இத்தகைய வேதிப்பொருள்கள் உலகளவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70,000 டன் அளவுக்கு நீர்நிலைகளுக்குள் கசிகின்றன என்று ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

- நிஷா

SCROLL FOR NEXT