எ
றும்புகளுக்கு அடுத்தபடியாக நம் வீட்டில் அதிகம் தென்படுபவை சிலந்திகள். சிலந்தி என்றாலே வலை பின்னி இரையைப் பிடிக்கும் சிலந்தி மட்டும்தான் என்று பலரும் நம்புகிறார்கள். இரையை வேட்டையாடி உண்ணும் சிலந்தி பற்றித் தெரியுமா?
பொதுவாக இரைகொல்லிகள் என்றாலே சிங்கம், புலிதான் நம் மனதில் தோன்றும். பூச்சிகளும் வேட்டையாடுகின்றன. வலை கட்டி இரை தேடாத சிலந்திகள் மறைந்திருந்து வேட்டையாடி இரையைப் பிடிப்பது ஆச்சரியம்தான். இந்தச் சிலந்திகளை நம்மைச் சுற்றியிருக்கும் தாவரங்களில் பார்க்கலாம். சற்றே உன்னிப்பாக கவனித்தால் இவற்றை அறிய முடியும்.
இந்தச் சிலந்தி வகையெல்லாம் என் வீட்டில் இருக்கும் என்று கற்பனை செய்ததே இல்லை. சென்னையில் கடந்த ஆண்டு வீசிய வார்தா அதிவேகப் புயலில் எங்கள் வீட்டின் முன்புறம் குடைபோல் விரிந்திருந்த மஞ்சள் வாகை (Copper Pod) மரத்தை இழந்துவிட்டோம். அது விழுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் மர இலைத் தொகுதியின் பின்புறம் இந்தச் சிலந்தி உருமறைந்து இருப்பதை ஒருநாள் கண்டறிந்தேன்.
நாடெங்கும் தென்படும் இந்தச் சிலந்தியின் உடல், அதிகபட்சம் ஒரு செ.மீ. அளவுகூட இருக்காது. 9 மி.மீ. அளவே இருக்கும். இதன் கால்களில் முட்களைப் போன்ற சிறு தூவிகள் நீட்டிக்கொண்டிருக்கும். அதனால் இதன் பேர் முட்கால் சிலந்தி. படத்தில் இருப்பது முட்கால் சிலந்திகளில் White lynx (Oxyopes shweta) வகை. இதேபோன்ற பல சிலந்தி வகைகள் இருக்கின்றன.
இது புல்வெளி, புதர், செடிகளில் மறைந்திருந்து இரையை தாக்கிப் பிடிக்கிறது. தாவரங்களில் மறைந்திருந்து மலர்களில் தேனெடுக்க வரும் பூச்சிகளைப் பிடிப்பது இதன் வழக்கம். தட்டான் போன்று தன்னைவிட எடை மிகுந்த பூச்சிகளையும் இந்தச் சிலந்திகள் வேட்டையாடுவது உண்டு.
நான் எடுத்த படத்தில் சிலந்தி தன் கால்களில் இரையைப் பிடித்திருப்பதைப் பார்க்கலாம்.