உயிர் மூச்சு

கான்கிரீட் காட்டில் 06: நீளக் கட்டெறும்பு?

ஆதி வள்ளியப்பன்

வ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை ஒட்டி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்படும். சென்னைக்கு அருகில் உள்ளதாலும், அதிகமான பறவை வகைகளை - குறிப்பாக நீர்ப்பறவை வகைகளை - பார்க்க முடியும் என்பதால் ஒவ்வொரு பருவத்திலும் வாய்ப்பு கிடைத்தால் அங்கே செல்வது வழக்கம்.

இப்படி ஒரு முறை வேடந்தாங்கலுக்கு பறவை நோக்கச் சென்றிருந்தபோது, புளிச்ச கீரை தாவரம் ஒன்றில் சற்றே பெரிய கட்டெறும்பைப் போன்ற தோற்றத்தில் ஒரு பூச்சி காணப்பட்டது. அதன் தோற்றம் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். அதனால் இலைக்கு அடியில் இருந்த பூச்சியை படமெடுப்பதற்கு வாகாக சற்றே உயர்த்திப் பிடித்தேன். அப்போதுதான் அது கும்பிடு பூச்சி (Praying Mantis) என்று தெரிந்தது.

கும்பிடுபூச்சி பொதுவாக பச்சை, பழுப்பு ஆகிய நிறங்களில் சுற்றுப்புறத்தில் இருக்கும் தாவரம் அல்லது காய்ந்த சருகுகளுடன் உருமறைத் தோற்றத்துடன் காணப்படும். அதற்கு மாறாக படத்தில் இடம்பெற்றுள்ள பூச்சி கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருந்தது. இது கும்பிடு பூச்சியின் இளம்பூச்சி. இளமையாக இருக்கும்போது ஒரு நிறமும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தையும் அடைவது பூச்சிகளில் சாதாரணம்.

கும்பிடு பூச்சியின் வளர்ந்த பூச்சிகளை நெருங்கிப் பார்க்காமல் சிலர் வெட்டுக்கிளி என்று நினைக்கக்கூடும். இவை வெட்டுக்கிளி அல்ல. முன்னங்கால்களை கும்பிடுவதுபோல வைத்திருப்பதால், இதற்கு கும்பிடு பூச்சி என்கிற பெயர் வந்தது. தயிர்கடைப் பூச்சி, பெருமாள் பூச்சி என்று வேறு பெயர்களும் உண்டு.

இதுவும் ஒரு வேட்டையாடிப் பூச்சிதான். மற்ற பூச்சிகளைப் பிடித்துண்ணும். முன்னங்கால்கள் வலுவானவை, முட்களைக் கொண்டவை. வேட்டையாடுவதற்கு முன்னங்கால்களைப் பயன்படுத்துகிறது. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இரையைப் பிடிக்கும் திறன் கொண்டது.

நாடெங்கும் காணப்படும் இந்தப் பூச்சியில் சிறியது முதல் பெரியதுவரை பல்வேறு வகைகள் உண்டு. தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் தென்படும். தனியாகவே இருக்கும். இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும், பகலிலும் தென்படலாம். ஒளியை நோக்கி ஈர்க்கப்படும்.

இளம்பூச்சிகளுக்குப் பொதுவாக இறக்கை இருக்காது. படத்தில் உள்ள பூச்சிக்கும் இறக்கைகள் இல்லை. அது மட்டுமல்லாமல் அது தன் பச்சை நிறத்தை முழுமையாகப் பெறாமல், கறுப்பு நிறத்தைக் கொண்டிருப்பதால் பார்ப்பதற்கு சற்றே நீண்ட கட்டெறும்பைப் போன்று இருக்கிறது. எறும்பைப் போன்றே தோற்றம் தரும் பூச்சி வகைகள் வேறு உண்டு என்றாலும், இது முழு வளர்ச்சி நிலையை எட்டாததால் எறும்பைப் போன்ற மேற்புற நிறத்தைக் கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT