வெ
ப்பம் அதிகமானால் நீர் ஆவியாகி மேகமாகிறது. அது மழையாகும்போது, நிலம் மீண்டும் குளிர்கிறது. வெயிலால் மீண்டும் வெப்பமாகிறது. மீண்டும் மழை பொழிகிறது. இந்தத் தொடர் நிகழ்வு எல்லா அமைப்புகளிலும் நடந்துகொண்டே இருக்கிறது.
எல்லா நிகழ்வுகளும் பரத்தலை, அதாவது பரவுதலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. குளத்தில் விட்டெறியும் கல் எழுப்பும் அலைபோல... சில உடனே நடக்கின்றன. சில நீண்ட நாட்களில் நடக்கின்றன.
ஒரு பூ விரியும்போது, அதில் இருந்து மணம் பரவுகிறது. இது ஓர் வேதியியல் நிகழ்வு. அந்த மணம் ஒரு வண்டை ஈர்க்கிறது. மகரந்தம் பரவுகிறது. பூ பிஞ்சாகிக் காயாகிப் பழமாகி விதையாகி, மீண்டும் உதிர்ந்து முளைக்கிறது. ஒரு குழந்தை கருமுட்டையில் தொடங்கி வளர்ந்து பெரிதாகி மனிதராகிப் பின் மடிந்து, மீண்டும் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு, மீண்டும் வேறு பயிர்களில் சேர்ந்து மீண்டும் உணவாகி... இப்படி மீண்டும் மீண்டும் பரவிக்கொண்டே இருக்கிறது.
பெருவெடிப்பு நடந்து சூரியக் குடும்பம் தோன்றி அதில் புவிக்கோளம் வளர்ந்து, மீண்டும் ஒரு கருந்துளை தோன்றி அதில் அனைத்தும் உள்ளடங்கி, மீண்டும் ஒரு பெருவெடிப்பு நடந்து மீண்டும் சூரியன்கள் தோன்றி இந்தப் பரவல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த அனைத்துமே ஒரு வடிவத்தில், ஒரு பாங்கமைப்பில் நடக்கின்றன என்பதுதான் சுவையான உண்மை. இவற்றின் அடிப்படையைக் கண்டறிய வேண்டும்.
இப்படியான பாங்கமைப்பைக் கணக்கில் கொண்டு பண்ணை வடிவமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். பில் மொலிசன், 'மூலிகைச் சுருள் வடிவப் பாத்தி முறை' ஒன்றை வடிவமைத்திருந்தார். நீரின் பள்ளத்தை நோக்கிய ஓட்டம், அதிக அளவு வெயில் அறுவடை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு இதை உருவாக்கினார். இந்த வடிவத்துக்கு அடிப்படை, அனசடாசி பழங்குடிகளின் வடிவமாகும்.
இதேபோல வட்ட வடிவப் பாத்திகளை அமைத்து, அதன் நடுவில் நீர் சொட்டும்படி செய்வதால் நீரின் தேவையைப் பெருளவு குறைக்க முடியும். நேர்க்கோட்டு முறையில் மரங்களை நடுவதற்குப் பதிலாக, வளைவு முறையில் நடுவதன் மூலம் குறைந்த இடத்தில் அதிக மரங்களை நட்டுவிட முடியும். அதாவது 36 மரங்கள் நடக்கூடிய இடத்தில், 45 மரங்களை நட்டுவிட முடியும்.
வடிவமைப்பில் நாம் பின்பற்ற வேண்டிய மற்றொரு விதி, முடிந்தவரை சிறியதாக அமைப்பது, முடிந்தவரை அது வேறுபட்டதாகவும் இருப்பதுபோல் பார்த்துக்கொள்வது. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக அமைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இடத்துக்குத் தகுந்தாற்போல் வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
(அடுத்த வாரம்: பருவங்களும் தட்பவெப்பமும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com