கண் நிறையும் நீலக் கடலுக்குள் ஆகாயம் இருக்கிறது; காடு இருக்கிறது; பவளத் திட்டுகளான நகரங்கள் மறைந்திருக்கின்றன; குதிரைகளும் சிங்கங்களும் துடுப்புகளுடன் வசிக்கின்றன. ஒரு பிரபஞ்சம் கடல்களுக்குள் குடிகொண்டிருப்பதை அழகிய இசை, ஓங்காரத்துடன் பிபிசியின் ‘பிளானட் எர்த்: புளூ பிளானட் - 2’ பாகத்தின் ஐந்து நிமிட வெள்ளோட்ட வீடியோ நமக்குக் காட்டுகிறது. கடல்தான் இந்த உலகிலேயே மிக அதிக அளவிலான உயிர்கள் வசிக்குமிடம் என்பதை இந்த வீடியோவைப் பார்த்தால் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விடுவோம்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு முன்னர், ஏழு பாகங்களாக ஒளிபரப்பப்பட்ட ‘புளூ பிளானட்’ நிகழ்ச்சி, கடல் அலைகளுக்குக் கீழே இருக்கும் உயிர்களின் வாழ்க்கையைத் துல்லியமாகக் காட்டியது. தற்போதுள்ள தொழில்நுட்பம், அதிநவீன கேமராக்களின் வசதியால் மேலும் ஆழமாகச் சமுத்திரத்துக்குள் பயணிக்கத் தயாராகுங்கள் என்கிறார் புகழ்பெற்ற இதன் வர்ணனையாளர் டேவிட் அட்டன்பரோ. தொலைக்காட்சித் துறையில் 65 ஆண்டுகளை நிறைவு செய்யும் இயற்கையியலாளரான டேவிட் அட்டன்பரோவின் குரலிலும் உடலிலும் தற்போதும் உற்சாகம் குறையவில்லை.
“கடலுக்கு அடியில் இருக்கும் உலகங்கள் குறித்த புதிய தேடலில் நானும் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நமது கோளை முக்கால் பங்கு ஆக்கிரமித்துள்ள கடல் நீருக்குள், அறியப்படாமல் இருக்கும் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளும் தொடராக இது அமையும்” என்கிறார்.
உலகெங்கும் உள்ள கடல்களில் வசிக்கும் தனித்துவமான உயிரினங்கள், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதோடு, தற்போதுள்ள சமுத்திரங்களின் ஆரோக்கிய நிலையையும் புலனாய்வு செய்ய இருக்கிறது ‘புளூ பிளானட்-2’. தற்போது கடல்சார் உயிர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைக் காண்பிப்பதன் மூலம் சமுத்திரங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு சரியான நினைவூட்டலாகவும் இந்தத் தொடர் இருக்கும் என்கிறார் டேவிட் அட்டன்பரோ. இந்தத் தொடர் வரும் 29-ம் தேதி முதல் ‘பிபிசி ஒன்’ அலைவரிசையில் ஒளிபரப்பப்படுகிறது.
நெஞ்சில் ரோமம் உள்ள நண்டுகள், நீரைப் பீய்ச்சும் ஓங்கில்களின் ஆட்டம், நடனமாடும் யெட்டி நண்டுகளின் இந்திர ஜாலம், பாய்ந்து செல்லும் கடல் டிராகன், துள்ளி விழும் பெருங்கணவாய், அமைதிப்படையைப் போல உற்றுப் பார்க்கும் கருநிற மீன்களின் கண்கள் என புளூ பிளானட் தான் சேகரித்து வைத்திருக்கும் விருந்தை சற்றே நமக்குத் திறந்து காண்பிக்கிறது.
இதன் வெள்ளோட்ட வீடியோவுக்கு இசையமைத்திருப்பவர் ஹாலிவுட்டின் இசைக் கோப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர். புளூ பிளானட்டின் முதல் பாகத்தைப் பார்த்த தாக்கத்தில் ‘ஓஷன் புளூம்’ பாடலை உருவாக்கிய ரேடியோ ஹெட் ராக்பேண்ட் குழுவினர் ஹான்ஸ் ஸிம்மருடன் பணியாற்றியுள்ளனர். “கடலில் வசிக்கும் வியக்கத்தக்க உயிரினங்கள், கடலடி நிலப்பரப்புகளின் பிரம்மாண்டத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் புளூம் பாடல் இருந்தது” என்கிறார் ஹான்ஸ் ஸிம்மர்.
நமது பூமிக் கோள் நீலக் கடல்களால்தான் சூழப்பட்டிருக்கிறது. பசிபிக் மகாசமுத்திரம் மட்டும் பூமியின் பாதியை நிறைத்திருக்கிறது. விமானத்தில் பறந்தால்கூட 12 மணி நேரத்துக்கு நிலப்பரப்பையே காணமுடியாத நீளம் அது. அந்த சமுத்திரங்களின் இயற்கை, உயிரினங்களின் வாழ்க்கையை மீண்டும் அருகே பார்ப்பதற்குத் தயாராவோம்.
https://www.youtube.com/watch?v=_38JDGnr0vA