சென்ற வாரம் கன்னி நாய்கள் எப்படித் தமிழகத்துக்கு வந்தசேர்ந்தன என்பதைப் பார்த்தோம். சொல்லப்போனால், இந்தக் கூர்நாசி நாய்கள் இந்தியாவுக்கே புதியவைதான். முகலாயர் ஆட்சியின்போதுதான் அரேபிய, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அதிக அளவில் ‘ஸ்லோகி ஹவுண்ட்ஸ்’ எனப்படும் நாய் இனம் இந்தியாவை வந்தடைந்தது!
இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘காரவன் ஹவுண்ட்’ அல்லது ‘முதோல் ஹவுண்ட்’ நாய் இனம், ஸ்லோகி ஹவுண்ட் வழியாகப் பிறந்ததே. அது தக்காணப் பீடபூமிக்குப் பரவி இங்கு வந்தது.
அதன்பிறகு ஆங்கிலேயர்கள் வேட்டையாடுவதற்காக ‘மெட்ராஸ் ஹன்ட் கிளப்’பை உருவாக்கி ஆயிரக்கணக்கிலான நாய்களை இறக்குமதி செய்தனர். அவற்றில் பல நமது மண்ணின் வெப்பத்தைத் தாங்காமல் இறந்து போயின. மீதமிருந்த நாய்களையும், மத்திய ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்லோகி இன நாய்களையும் ‘பொலிகார் ஹவுண்ட்’களுடன் சேர்த்து கலப்பினத்தை ஏற்படுத்தினர். அது மீண்டும் பொலிகார்களிடம், அதிகஅளவிலான கூர்நாசி நாய்களைக் கொண்டு சேர்த்தது.
காலப்போக்கில் அந்நிய நாய் இனங்களில் ஜமீந்தார்கள் ஆர்வம்கொள்ள, இந்த நாய்கள் எளிய மக்களிடம் சென்றடைந்தன. அவர்கள்தான் அதை விடாமல் இன்றுவரை பாதுகாத்துவருகின்றனர்.
உதாரணத்துக்கு, ஊத்துமலை ஜமீன் என்.ஹெச்.எம்.பாண்டியன் என்பவர் 1946-ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து 3 ஜோடி ‘கிரே ஹவுண்ட்’களை இறக்குமதி செய்ததுதான் இப்போதுவரை உள்ள பொலிகார் ஹவுண்ட்களுக்கு ஆதாரம். அவர் இறக்குமதி செய்தது ‘இங்கிலீஷ் கிரே ஹவுண்ட்’. பொலிகார் ஹவுண்ட் - கிரே ஹவுண்ட் இரண்டுமே ஓரளவு உருவ ஒற்றுமை கொண்டவை என்ற போதிலும், பின்னது சற்று தசைப்பற்றுடன் தோற்றமளிக்கும். பின்னாட்களில், அந்த நாய்கள் தொடர்ந்து இனவிருத்தி செய்யப்பட்டு வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன.
இப்படியான பல வழிப் பகிர்வு மூலம் உருவானதே இந்த 'கன்னி நாய்'. இன்று தென் மாவட்டங்களில் அதிக அளவில் பல சமூகத்தினராலும் இந்த வகை நாய்கள் வளர்க்கப்படுகின்றன.
இன்றளவிலும் இந்த நாய்கள் பற்றிய அறிவு ‘குருவழி பயிலுதல்’ மூலம்தான் நடைபெறுகின்றது. குருவிடம் நாய்களைத் தேர்வு செய்வதையும் அதன் நுணுக்கங்களையும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிகின்றனர். அன்றைய காலகட்டத்தில், குட்டிகளை விற்கும் வழக்கம் இல்லை. எனவே, தேவை ஏற்படும்போது மட்டும் நாய்களை இணை சேர்த்து அந்தக் குட்டிகளில் சிறந்ததைத் தேர்வு செய்து, மீதம் உள்ள குட்டிகளைக் கொன்றுவிடும் வழக்கம் இருந்தது.
அப்படித் தேர்வு செய்யப்பட்டு வளர்ந்த நாய்களின் குட்டிகளையே குருநாதரிடமிருந்து பெறுகின்றனர். அவர்களைக் கவுரவிக்கும் பொருட்டு இது ‘இன்னார் இனவழி வந்தது’ என்று தனது குருநாதர் பெயரை முன்மொழிந்து நாய்களை வழங்குவார்கள். அன்றும் இன்றும் அவை அடையாளக் குறியீடு மட்டுமே.
இந்த நாய்கள் தமிழகத்தில் தடம் பதித்துக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மண்ணோடும் மக்களோடும் பழகி எளிய மக்களிடம் ஒரு அமரத்துவமான நெருக்கத்தை இந்த நாய் இனம் கண்டுள்ளது. தென் தமிழகக் கிராமங்களின் அடையாளமாக மாறி தமிழகத்தின் தனி இனம் என்கிற பெயரை கன்னி நாய் பெற்றுள்ளது. இவை வேட்டைக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தன. 1973-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேட்டை தடை செய்யப்பட்டது. இதனால் கன்னி நாய்கள் வேட்டைக்கான பயன்பாட்டை இழந்த போதிலும், இன்றும் அதிக அளவில் கிராமங்களில் வளர்க்கப்பட்டுவருகின்றன.
(அடுத்த வாரம்: ராஜபாளையத்தின் ராஜா )
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com