வாம்பயர் கதைகள் என்றாலே டிராகுலா, இருண்ட கோட்டைகள், மர்மமான காடுகள் எனப் பல காட்சிகள் நினைவுக்கு வரும்.
இத்தகைய கதைகளின் வரலாற் றையும் கலாச்சாரப் பின்னணியையும் அறிந்துகொள்வதற்காக ருமேனியாவில் முதல்முறையாக நடைபெற்ற வாம்பயர் இலக்கியச் சிறுகதை நிதிநல்கைக்குத் தேர்வான நான்கு பேரில் இந்தியாவைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் லூனா ஜெய்யும் ஒருவர்.
மொழிபெயர்ப்பு, எழுத்து, செம்மை யாக்கம் உள்ளிட்ட பதிப்புப் பணிகளில் சுயாதீனமாகப் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த லூனா. சிறு வயது முதலே வாசிப்பிலும், குறிப்பாக கிரேக்கப் புராணக் கதைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு, இந்த நிதிநல்கை புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது!
வாம்பயர் கதைகள்
வாம்பயர் கதைகளின் உலகளாவிய அடையாளமாக விளங்கும் டிராகுலா வுக்கும் ருமேனியாவின் டிரான்சில்வேனியா பகுதிக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கரின் புகழ்பெற்ற ‘டிராகுலா’ நாவல் இந்தத் தொடர்பை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது.
அதேநேரத்தில், ருமேனிய வரலாற்றில் இடம்பெற்ற விளாட் மூன்றாம் அரசரின் ஆட்சிப் பாணியும் டிராகுலா கதைகளுடன் தொடர்புபடுத்தப்படுவதாகச் சொல்கிறார் லூனா.
“வாம்பயர் கதைகள், கிரேக்கப் புராணங்கள் தொடர்பான புத்தகங்களைச் சிறு வயதில் படித்தபோது, என்னுடைய வாசிப்புத் தேர்வைப் பார்த்து என் மாமா முத்துராமன் கவலைப்பட்டார். ஆனாலும், அவரும் அப்பாவும் தொடர்ந்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து என் வாசிப்பை ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து வாசித்ததன் வழியாகத்தான் இத்தகைய வாய்ப்பைப் பெற முடிந்தது.
ருமேனியாவுடன் வாம்பயர் இலக்கியம் தொடர்புபடுத்தப்பட்டு அதிகம் பேசப்பட்டாலும், எல்லாக் கலாச்சாரங்களிலும் அது தொடர்பான கதைகள் இருக் கின்றன. தமிழில்கூட ரத்தக்காட்டேரி போன்ற கதாபாத்திரங்களைப் பற்றியும், பூச்சாண்டிக் கதைகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம்.
இந்த நிதிநல்கைக்குப் பிறகு வாம்பயர் இலக்கியம் குறித்து மேலும் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது” என்கிற லூனா, “சிறிய அளவிலான எழுத்துப் பணிகளுக்கு ஏ.ஐ. உதவியாக இருக்கும்வரை பரவாயில்லை.
ஆனால், நீண்ட காலத்தில் அது நமக்குப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதை வெறும் ஒரு கருவி என்று கடந்து போய்விட முடியாது” என்கிறார்.
‘டிராகுலா மேப்', ‘ஸ்டோக்கர் வைனரி’ அமைப்புகள் நடத்திய இணையப் போட்டியில் கலந்து கொண்டு, கதை எழுதி, வென்றதன் மூலம் இந்த நிதிநல்கை லூனாவுக்குக் கிடைத்திருக்கிறது.
அந்த அமைப்பே பயணம் சார்ந்த அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. ருமேனியாவில் ஒரு மாதம் தங்கியிருந்த லூனா, 3 வாம்பயர் சிறுகதைகளை எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது நிதிநல்கையின் நிபந்தனை.