ஒவ்வோர் ஆண்டும் பொதுவெளியில் சமூக வலைத் தளங்களில் அதிகம் தாக்கம் செலுத்திய சொல் அந்த ‘ஆண்டின் சொல்’லாகத் தேர்வுசெய்யப்படுகிறது. அப்படி 2025இல் தேர்வுசெய்யப்பட்டுள்ள சொற்களில் சில:
ஆக்ஸ்ஃபோர்டு அகராதி: ‘Rage bait’ சமூக வலைத்தளங்களில் ஒருவரை இன்னொருவர் வம்புக்கு இழுப்பதையும், கேலி செய்து கோபப்பட வைப்பதையும் ‘Rage bait’ பழக்கம் என்கிறது இளைய தலைமுறை.
காலின்ஸ் அகராதி: ‘Vibe Coding’ - செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (ஏ.ஐ) உதவியோடு ‘கோடிங்’ எழுதுவது ‘Vibe Coding’. ஜாலியாக ‘பிராம்ப்ட்’ தந்தாலும் சரியாக கோடிங் எழுதி ஆச்சரியப் படுத்துகிறதாம் ஏ.ஐ. இதில் சாதகம் - பாதகம் இரண்டும் இருப்பதாகச் சொல்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள்.
மெரியம் - வெப்ஸ்டர்: ‘Slop’ - ஏ.ஐ-யைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு டிரெண்ட் உருவாக்குவது, தரத்தைவிட எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் தந்து ஒளிப்படங்கள், காணொளிகளைக் கணக்கில்லாமல் பதிவிட வேண்டுமென்கிற மோகம் ‘Slop’ எனப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் அகராதி: ‘Parasocial’ - சமூக வலைத்தள பயனர் ஒருவருக்கு நடிகர்கள், யூடியூபர்கள் போன்ற பிரபலங்களோடு இருக்கும் ‘ஒருதலை காதல்’, ‘Parasocial’ எனப்படுகிறது. அதாவது நேரடிப் பழக்கம் இல்லாத ஒருவர் மீது கொண்ட கண்மூடித் தனமான பற்று எனவும் விளக்கப்படுகிறது. கரோனா காலக்கட்டத்துக்குப் பிறகு இப்படி ‘Parasocial’ உறவு முறையில் பலரும் இருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன.
டிக்ஷ்னரி.காம்: ‘67’ (Six-Seven) - இதை ‘சிக்ஸ்டி செவன்’ எனப் படிக்காமல், ‘சிக்ஸ் செவன்’ எனப் படிக்க வேண்டுமாம். 90’ஸ் கிட்ஸ் மட்டுமல்ல அதற்கு முந்தைய கிட்ஸும் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது ஆனால், ஈராயிரக் குழவிகளுக்கு இது மிகவும் பிடித்த சொல்லாம்.
‘67’ என்றால் ‘so?’, ‘may be’ என்கிற பொருளில் வழங்கப்படுகிறது. நேரடியாக ‘ஒரு வேளை’ ‘இருந்தாலும் இருக்கலாம்’, ‘ஏதோ ஒண்ணு’ என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் மாடர்ன் ஆக ‘67’ என்றுதான் பயன்படுத்துகிறார்களாம் 2கே கிட்ஸ்.