திசைகாட்டி

பெண்கள் ஆரோக்கியம்: ஆராய்ச்சியில் எங்கே இருக்கிறோம்? - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 7

நெடுஞ்செழியன்.தா

உலக மக்கள் தொகையில் சுமார் 50% பேர் பெண்கள். இந்தியாவில் மட்டும் பெண்கள் 48.42% ஆகவும் உலக அளவில் இந்தியப் பெண்களின் பங்கு 17.3% ஆகவும் உள்ளது. என்கிறபோதும், பெரும்பாலான பெண்கள் தங்களுடைய உடல்நலம் மீது முழுமையாகக் கவனம் செலுத்துவதில்லை. குடும்பப் பொறுப்புகள், வேலைப்பளு போன்ற காரணங்களால் உடல்நலப் பாதிப்புகளின் ஆரம்ப அறிகுறிகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். இதனால் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மட்டுமே மருத்துவரை அணுகுகிறார்கள்.

நிலவரம் என்ன?

இந்தியக் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் பெரும்பாலும் நோய்கள் குறித்தும் உடல்நலப் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் குறித்த புரிதல் இல்லாததாலும் மருத்துவரை அணுகுவதில் தயக்கம் காட்டுவதாலும் முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பது தாமத மடைகிறது. இதனால் பெரும்பாலான நோய்கள் ஆரம்பக் கட்டத்தைத் தாண்டித்தான் கண்டறியப்படுகின்றன. இன்றும் பெண்கள் தங்களது உடல்நலப் பிரச்சினைகள் குறித்துத் தங்கள் குடும்பத்தினருடன் வெளிப் படையாகப் பகிர்ந்துகொள்வதற்கான சமூகச் சூழல் இல்லாத நிலை தொடர்கிறது. இந்தத் தடைகளோடு சேர்த்து, சிகிச்சை செலவுகள், குடும்பப் பொறுப்புகள், சமூகக் களங்கம் போன்ற காரணங்கள் பிரச்சினையைத் தீவிரப்படுத்துகின்றன.

ஸ்மார்ட் பிரா | (உள்படம்) கேனன் டாக்டிவிரன்

தொழில்நுட்பத்தின் பங்கு:

உலகின் முன்னணிப் பல்கலைக் கழகங்கள், பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து வருகின்றன. அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக் கழகம், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆராய்ச்சித் துறையில் முன்னோடியாக விளங்குகிறது.

செயற்கை நுண்ணறிவின் (AI) ஒரு பகுதியான இயந்திரக் கற்றல் (Machine Learning) தொழில்நுட்பம் மூலம் பெண்களின் உடல்நலப் பாதிப்புகள் குறித்துத் தீவிர ஆராய்ச்சி மேற் கொண்டுள்ளது. இதில் நோய்களின் தன்மையை அறிய ஏற்கெனவே உள்ள பழைய மருத்துவத் தரவுகளைக் கொண்டு (Existing Medical Data) நோய் கண்டறிதல் (Diagnosis), நோயின் ஆரம்பக்காலத் தகவல் திரட்டு (Early Data Collection), துல்லியமான மருத்துவ சிகிச்சை (Treatment) ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

புதுப் புரட்சி:

ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேனன் டாக்டிவிரன் தலைமையிலான குழு ‘ஸ்மார்ட் பிரா’ எனும் நவீனக் கருவியை உருவாக்கியுள்ளது. இது உடலின் மேல் அணியும்படியான மீயொலித் (Wearable Ultrasound) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இந்தக் கருவி, ‘மாமகிராம்’ பரிசோதனை செய்யாமல் உடலில் மிகச்சிறிய அளவில் உள்ள புற்றுநோய்க் கட்டிகளையும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியக்கூடிய திறன் கொண்டது. மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், கிட்டத்தட்ட 100% குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அந்த வகையில், இக்கருவி மார்பகப் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதன் விலை 3 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 265) ஆக இருப்பதால் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றுமொரு சிறப்பம்சம்.

இந்தியாவில் பெண்கள் உடல்நலத் துக்கான ஆராய்ச்சி, நோய் கண்டறிதல், சிகிச்சை, விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டயம். எம்.ஐ.டி. போன்று உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களைப் போல, பெண்கள் ஆரோக்கியம் தொடர் பான ஆராய்ச்சி முறைகள் இங்கும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கற்றல் மூலம் பெண்கள் உடல்நலம் (Female Medicine through Machine Learning) தொடர்பான ஆராய்ச்சி கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு நீர்க்கட்டி (பிசிஓஎஸ் - பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) பாதிப்பு இருப்பதாகவும், 70% பேர் நோயைக் கண்டறியாமல் இருப்பதாகவும் தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோல, கருமுட்டை ஆரோக்கியம், இதய நலம், ஹார் மோன் பிரச்சினைகள், உடல் இயங் கியல், நாளமில்லா சுரப்பியியல் துறைகளைப் போன்று பெண்களின் உடல் நலம் தொடர்பான விஷயங்களில் ஆராய்ச்சி செய்யுமாறு மாணவர்களை எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் ஊக்கப் படுத்திவருகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும் இத்துறை சார்ந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித் திருக்கும் இப்பல்கலைக்கழகம், திறமையானவர்களுக்கு வாய்ப்பளித்து வரவேற்கிறது.

பெண்கள் ஆரோக்கியம் குறித்த ஆராய்ச்சிகள் எங்கேயோ போய் விட்டன. இது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் இது போன்ற எண்ணற்ற ஆராய்ச்சிகள், முன்னணிப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும்!

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

முந்தைய அத்தியாயம்: வேளாண் ஆராய்ச்சியின் புதிய முகம் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 6

SCROLL FOR NEXT