இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2.5 கோடி மாணவர்கள் இளங்கலைப் பட்டப் படிப்புகளில் சேர்கிறார்கள். அதில் இளங் கலை வணிகவியல் (பி.காம்.) படிப்புகளை மட்டும் 43.4 லட்சம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
பி.காம். பிரிவில் ஒவ்வோர் ஆண்டும் பட்டப் படிப்பை நிறைவுசெய்யும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது.
மாணவர்களின் தேர்வு: கலை, அறிவியல் படிப்புகளை விரும்பும் மாணவர்களின் முதன்மைத் தேர்வாக இருப்பவை வணிகவியல் படிப்புகள்தான். நூற்றுக்கணக்கான பாடப்பிரிவுகள் இருந்தாலும் கிட்டத் தட்ட 13.1% பேர் பாரம்பரியமான வணிகவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கி றார்கள்.
பி.காம். பட்டப் படிப்பில் கணக்கியல், கணக்கியல் - நிதி, வங்கி நிர்வாகம் - காப்பீடு, கணினிப் பயன்பாடுகள், மின்னணு வர்த்தகம், வரி நிர்வாகம், மனிதவள மேலாண்மை, சர்வதேச வர்த்தகம், நிதி சந்தைகள் எனப் பல பிரிவுகள் உள்ளன. இவை தவிர சி.ஏ., சி.எம்.ஏ. போன்ற படிப்பு களும் உள்ளன.
பி.காம். படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு இருக்கிற சூழலில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இன்னும் தங்கள் பாடத் திட்டங்களை ‘அப்டேட்’ செய்யவில்லை. வளர்ந்துவரும் கணினித் தொழில் நுட்பத்தை உள்வாங்கி எதிர்காலத்துக் கான பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இன்னும் கணக்கு, வரி, தணிக்கை, வணிகச் சட்டம், பொருளாதாரம் போன்ற பாரம்பரியப் பாடங்களையே கற்பிக்கின்றன. பெரும்பாலும் பல கல்லூரிகளில் அவை ஏட்டுக்கல்வியாகவே உள்ளன. உலக அளவில் வணிகவியல் துறை பெருமளவு முன்னேறிவிட்டது. உலகமய மாக்கலால் பொருளாதாரம் எல்லா நாடுகளின் உயிரிழை யோடும் இணைந்து, ஒற்றைப் பின்னலுக்குள்ளாக ஊடுருவிவிட்டது.
நிதி – வங்கித் துறை, பிளாக் செயின், செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிடிக்ஸ், ரோபாடிக் பிராசஸ் ஆட்டோமேஷன், டிஜிட்டல் பேமென்ட்ஸ் போன்ற தொழில்நுட்பங்களை ஏற்று வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. கடன், காப்பீடு, முதலீடு போன்ற சேவைகளைக் கையடக்கத் திறன்பேசி செயலி களை மையமாகக் கொண்டு ஃபின்டெக் (Financial Technology) நிறுவனங்கள் வழங்கத் தொடங்கிவிட்டன.
சிங்கப்பூர் மாடல்: மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக ஃபின்டெக் துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கப்பூர் திறம்படச் செயல்பட்டுவருகிறது. சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள ஃபின்டெக் வளர்ச்சியால் அந்நாட்டில் நாணயங் களும் ரூபாய் நோட்டுகளும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியுள்ளன.
நிதி உலகம் இனி வங்கிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அனைவராலும் அணுகக்கூடிய வகையில் மாறிக்கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கானோருக்கு வங்கி - நிதி சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் செயலிகள் உருவாக்கப்பட் டுள்ளன.
இந்த மாற்றங்கள் அனைத்தும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம், காப்பீடு, கடன் போன்ற துறைகளை மேம்படுத்தி அன்றாட நிதி வாழ்க்கையை வேகமாகவும் எளிமையாகவும் மாற்றி வருகின்றன. சிங்கப்பூர் நிதி ஆணையம் அறிமுகப்படுத்திய ‘ரெகுலேட்டரி சாண்ட்பாக்ஸ்' போன்ற கொள்கைகள் இந்த மாற்றத்திற்கு முக்கிய அடித் தளமாக அமைந்தன.
பாடத்திட்டத்தில் மாற்றம்: மாணவர்கள் பட்டம் பெற்று வேலைக் குப் போகும்போது, அவர்களின் அறிவு அத்துறையின் தற்போதைய தரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். நிதிச் சந்தைகள், வங்கித் துறை ஆகியவை நம்ப முடியாத வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், வணிகவியல் தொடர்பான பாடங்களை எதிர்காலத்தை மனதில் கொண்டு மாற்றவேண்டிய அவசியம் உள்ளது.
பழைய மென்பொருள், பழைய கணக்கியல் நடைமுறை களையே படித்துவிட்டு, நவீனத் தொழில் நுட்பத்தோடு ஃபின்டெக் தளத்தில் வேலை செய்யும்போது சவாலாக இருக்கும். கல்வி முறையில் இந்த நவீன மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள, வர முயலும் நாடுகள் முன்னேறிச் செல்லும்; மற்ற நாடுகள் பின்தங்கும் சூழல் உருவாகிவிடும். நம் நாடும் இதில் விதிவிலக்கல்ல.
ஃபின்டெக், டிஜிட்டல் கரன்சி, பிளாக் செயின், ரிஸ்க் அனலிட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு, நியோ-பேங்கிங் போன்ற துறைகளை மையமாக வைத்துப் பாடத்திட்ட மாற்றம் செய்தால் மட்டுமே மாணவர்கள் நேரடியாக முன்னணி நிதி நிறுவனங்களில் தங்களை நிலைநிறுத்தும் அளவுக்குத் திறன்பெற முடியும். ஆசிரியர் களுக்குத் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பயிற்சி வழங்கிப் புதிய டிஜிட்டல் நிதிச் சூழல் தொடர்பான தகவல்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் படிப்பில் மாற்றத்தைச் செய்யவில்லை என்றால், மாணவர்கள் தங்களது சொந்த முயற்சியில் இந்த விஷயங் களைக் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும், ‘அப்டேட்’ செய்துகொள்ள வேண்டும். வணிகவியல் துறை சார்ந்த படிப்புகளில் முக்கியமான விஷயங் களைப் பட்டியலிட்டு மாற்றம் கொண்டு வரவில்லை எனில் உலக நாடுகளுடன் திறம்படப் போட்டிபோட முடியாது.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org
முந்தைய அத்தியாயம்: பெண்கள் ஆரோக்கியம்: ஆராய்ச்சியில் எங்கே இருக்கிறோம்? - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 7