நான் தற்போது பிளஸ் டூ கம்ப்யூட்டர், கணிதப் பாடப் பிரிவில் படித்துவருகிறேன். எனக்குக் கதைகள் படிக்கவும் எழுதவும் பிடிக்கும். அதற் கான படிப்புகள் உள்ளனவா என்பதைக் கூறுங்கள். - ரகுராமன்.ஆர், மின்னஞ்சல் வழியாக.
நாடகங்கள், கதைகள் எழுதுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. நிறைய விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். அதை அப்படியே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் இதற்கெனச் சான்றிதழ் படிப்பு முதல் முதுகலை படிப்புவரை பல்வேறு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
யுடெமி, கோர்செரா, எட்எக்ஸ் தளங்களில் ஸ்கிரீன் ரைட்டிங் சான்றிதழ் படிப்பை இணையதளம் மூலமாகப் படிக்கலாம். அது போலவே டிப்ளமோ இன் டிரமாடிக்ஸ் (ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்), ரைட்டிங் டிராமா, ஃபண்டமென்ட்ல்ஸ் ஆஃப் டிரமாடிக் ரைட்டிங் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்), புரொபெஷனல் கிரியேடிவ் ரைட்டிங் (டென்வர் பல்கலைக்கழகம்) ஆகியவை இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. ஆனால், கட்டணம் அதிகம்.
இவற்றைத் தவிர பி.ஏ. ஸ்கிரிப்ட் ரைட்டிங் படிப்பை KIIT பல்கலைக்கழகமும் பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை அன்னபூர்ணா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்டு ஃபிலிம் மீடியாவும் ரூட்ஸ் கல்லூரியும் (ஹைதராபாத்) வழங்குகின்றன. டிப்ளமோ இன் ஸ்கிரிப்ட் ரைட்டிங் படிப்பை ராமோஜி ஃபிலிம் சிட்டி, கிரியோ வாலி ஸ்கூல் ஆகியவை வழங்குகின்றன.
அது மட்டுமன்றி பி.ஜி. டிப்ளமோ படிப்பை புணேயில் உள்ள ஃபிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், சத்யஜித் ராய் ஃபிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் வழங்குகின்றன. உங்களின் விருப்பம்போல ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
நான் தற்போது எம்.எஸ்சி. தாவரவியல் படிக்கிறேன். நெட் / ஸ்லெட், ஐ.எஃப்.எஸ் தேர்வு, மெடிக்கல் கோடிங். இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமாக உள்ளது. வழிகாட்டுங்கள். - ரிது பிரியா, மின்னஞ்சல் வழியாக.
நீங்கள் என்ன ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களோ அதையே இலக்காகத் தேர்ந்தெடுங்கள். சிலர் ஆசிரியர் பணியை விரும்புவார்கள்.
சிலர் ஆட்சி, அதிகாரம் என விரும்பு வார்கள். நீங்கள் தெரிவித்திருப்பதில் வனப்பணியைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு ஆழ்ந்து படிக்க வேண்டும். இந்தத் தேர்வுக்காகப் படிக்கையில் நெட் / ஸ்லெட் தேர்வையும் எழுதுங்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரே படிப்பில் இரண்டு வேலைகளைப் பெற முயலலாம். ஐ.எஃப்.எஸ். தேர்வுக்கான தயாரிப்பு இதற்கு எளிதில் உதவும்.
அதுமட்டுமன்றித் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வன அலுவலர் பணியிடத் தேர்வுகளையும் எழுதுங்கள். இந்த அனுபவம் உங்களுக்குத் தகுந்த பயிற்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். இலக்கை அடைய உதவும்.
இல்லையென்றால் உங்கள் பாடப் பிரிவை ஒட்டி முன்னிலை வகிக்கும் ஆராய்ச்சிகளை முன்னெடுங்கள். உதாரணமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், உணவு வகைகள் இன்று கோலோச்சுகின்றன.
இந்தப் பிரிவுகளில் ஆராய்ச்சிகளை உள்நாட்டிலோ அல்லது வாய்ப்பு இருப்பின் தகுந்த கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டிலோ படிக்கச் செல்லலாம் அல்லது பிளான்ட் பயோ டெக்னாலஜியில் வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ ஆராய்ச்சி செய்யலாம். வெற்றிக்கான பாதைகள் பல உள்ளன. கவனமாக ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்.