மாணவர்களிடையே போட்டித் தேர்வுகள் குறித்த புரிதல் அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக அரசு, பொது நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தேர்வுசெய்யப் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வு போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன.
திட்டமிடல் முதல் ஒன்றிரண்டு தேர்வுகளில் வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக மனம் தளர்ந்து போட்டித் தேர்வுகளில் இருந்து விலகாமல், மீண்டும் தயார் படுத்திக்கொண்டு தொடர்ந்து முயற்சிசெய்ய வேண்டும்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர், இதற்கு முன் பல முறை தேர்வுகளை எழுதி அனுபவம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். தோல்வியை வெற்றியின் முதல் படியாகக் கருதி, தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்குடன் நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் கைகூடும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்து நடைபெறும் குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்குத் தயாராகலாம்.
இந்தத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் பல பகுதிகள் பொதுவாக இருப்பதால், ஒரு தேர்வுக்காக மேற்கொள்ளும் தயாரிப்பு அடுத்தடுத்த தேர்வுகளுக்கும் பயனுள்ள தாக இருக்கும்.
அதே வேளையில், ஒவ்வொரு தேர்வின் தன்மைக்கும் தகுந்தவாறு வினாக்களின் எண்ணிக்கை, வடிவம், கடினத்தன்மை போன்றவை மாறுபடலாம். எனவே, ஒவ்வொரு தேர்வுக்கும் உரிய தேர்வு முறையைப் புரிந்துகொண்டு அதற்கேற்பத் தயாராவது அவசியம்.
படிப்பது எப்படி?
போட்டித் தேர்வு எதுவாக இருந்தாலும் அதற்கான பாடத்திட்டத்தை முதலில் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். தேர்வுக்கு இருக்கும் கால அவகாசத்துக்கு ஏற்ப கால அட்டவணையைத் தயாரித்து, திட்டமிட்டு, தொடர்ச்சியாகப் படிப்பது அவசியம்.
முந்தைய வினாத்தாள்களில் இடம் பெற்ற வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி பெறுவது, தேர்வை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதுடன் வெற்றிக்கும் வழிவகுக்கும். தனியாகப் படிப்பதைக் காட்டிலும் குழுவாகச் சேர்ந்து படிப்பது பல்வேறு வகைகளில் பயனளிக்கும்.
பாடங்களைக் குழு உறுப்பினர் களிடையே பிரித்துக் கொண்டு, பின்னர் அவற்றைப் பற்றி விவாதித்துப் படிப்பது பாடங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். நாள்தோறும் செய்தித்தாள்களைப் படித்து, முக்கியமான செய்தி களைக் குறிப்பெடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு என நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொண்டு, தவறாமல் படிப்பது நல்லது.
பயிற்சி மையங்கள்
அரசு, சில தனியார் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்கள் கட்டணமில்லாப் பயிற்சிகளை அளித்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் ‘வட்டாரப் படிப்பு வட்டம்’ (Study Circle) மூலம் பெரும்பாலான போட்டித் தேர்வுகளுக்குக் கட்டண மில்லாப் பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அகில இந்திய குடிமைப் பணிகள் கட்டணமில்லாப் பயிற்சி மையம் சென்னையில் உள்ளது. நுழைவுத் தேர்வு மூலம் இந்த மையத்தில் சேர மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்குமிடம், உணவுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
மத்தியக் கல்வி அமைச்சகமும் ஐ.ஐ.டி. கான்பூரும் இணைந்து செயல்படுத்தும் ‘SATHEE’ இணையதளத்தின் மூலம், ஜே.இ.இ., நீட், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள், ரயில்வே வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள், வங்கிப்பணியாளர் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குக் கட்டணம் எதுவும் செலுத்தாமல் மாணவர்கள் தயாராகலாம்.
இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து முறை யாகத் தயாராகி முயன்றால், தங்கள் திறமைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
- கட்டுரையாளர், போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்; success.gg@gmail.com