கல்வி - வேலை வழிகாட்டி

வேலை செய்துகொண்டே படிக்க... | வெற்றி உங்கள் கையில்

இரா.நடராஜன்

என் மகள் பன்னிரண்டாம் வகுப்பு காமர்ஸ்-எகனாமிக்ஸ் படிக்கிறார். மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறார். எனக்குத் தொழில் விவசாயம். மேலே படிக்க வைக்க வசதி இல்லை. இருவரும் வேலைக்குப் போனால் எங்கள் குடும்பத்தின் நிலை உயரும். வழிகாட்டவும். - கருப்பன்னசாமி, திருவாடனை.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங் கள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை திறன் பெற்றவர்களை மட்டும் எதிர்நோக்குகின்றன. இந்நிலையில் படித்து வேலை தேடும் இளைஞர்களின் வாழ்வா தாரம் செம்மைப்பட அரசு நிறைய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி தாங்கள் எதிர்பார்க்கும் தகுதிக்கேற்ப அல்லது பணி களுக்கு ஏற்ப இளைஞர்களை வேலைக்கு எடுத்து வேலையின் வழி அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தேசிய தொழில் பழகுநர் வளர்ச்சித் திட்டத்தின்படி (NAPS) நிறுவனங்களுக்குத் தேவையான நபர்கள் புதியவர்களாக இருப்பினும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐந்தாம் வகுப்பு படித்தவர் முதல் ஐடிஐ, பட்டதாரிகள்வரை (கலை / அறிவியல்) இதன் மூலம் வேலைக்குச் சேரலாம். ‘NAPS 2.0’ திட்டத்தின்படி 2025-2026ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை விவரங்களைக் கவனமாகப் பார்க்கவும்.

பள்ளிப் படிப்பில் 5 முதல் 9ஆம் வகுப்புவரை தேர்ச்சி பெற்றிருந்தால் மாதந்தோறும் ரூ.6,800 உதவித்தொகையும், 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.7,800 உதவித்தொகையும், 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.8,800 உதவித்தொகையும், ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.8,800 உதவித்தொகையும், டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.9,800 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.10,800 உதவித் தொகையும் வழங்கப் படுகிறது.

கல்வித்தகுதிக்கான பணிக்கு ஏற்ப நிறுவனங்கள் ஆள்களைத் தேர்வு செய்கின்றன. இவர்கள் 6 முதல் 24 மாதங்கள்வரை தொழில்பழகுநராகப் (அப்ரென்டிஸ்) பணியாற்றலாம்.

இவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தில் 75% செலவை நிறுவனமும், 25% செலவை மத்திய அரசும் ஏற்கும். சேவைத் துறை, சில்லறை வணிகம், ஐடி, ஐடி சர்வீஸ், நிதித் துறைகளில் வேலை வாய்ப்பைப் பெறலாம். இப்பணி யிடங்களுக்கான விளம்பரங்கள் அவ்வப்போது சமூக ஊடகங்கள், நாளிதழ்களில் வெளியாகிறது.

முதலில் இது போன்ற பயிற்சிகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று, பின்னர் அரசு சான்றிதழுடன் வெளிவந்து அனுபவத்தின் அடிப்படையில் மற்ற வேலைகளில் சேரலாம். இதுபோலவே தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டமும் (NATS) செயல்படுகிறது.

இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் ஐடிஐ, டிப்ளமா, பொறியியல் படித்தவர்கள் இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒராண்டு பயிற்சியளிக்கப் படும். பின்னர் அரசுச் சான்றிதழுடன் வெற்றி கரமாக வெளியில் வந்து அனுபவத்தின் அடிப்படையில் பிற தொழில் நிறுவனங்களில் சேரலாம்.

உங்களது மகன் ஐடிஐயில் விண்ணப்பித்து தொழில்கல்வி பயிலலாம். செலவு அதிகம் இல்லை. மேலும் ஐடிஐயில் தேர்ச்சி பெற்றவர்களையே தொழில் நிறுவனங்கள் முதலில் தேர்வு செய்கின்றன.

இதனைத் தவிர புகழ்பெற்ற பெருந்தொழில் நிறுவனங்களில் ‘Learn while earn’ திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி பத்தாம் வகுப்பு முடித்தவர்களை நேரடியாகப் பணிக்கு அமர்த்தி, வார இறுதி நாள்களில் அவர்களுக்கு உரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்து, நான்கு ஆண்டு முடிவில் (எட்டு செமஸ்டர் முடிவில்) டிப்ளமோ சான்றிதழுடன் வெளியில் அனுப்புகின்றனர்.

வேலை செய்துகொண்டே வருமானமும் ஈட்டலாம், படித்தும் முன்னேறலாம். மேற்கூறிய திட்டங்களில் உங்களுக்கு உகந்ததைத் தேர்ந் தெடுத்து செயல்படவும். இதற்கு www.apprenticeship.india.gov.in தளத்தில் பதிவு செய்யவேண்டும்.

SCROLL FOR NEXT