பெரிய கான்வாஸ்களில் மட்டுமல்ல; விரல் நுனியில் அடங்கும் அளவி லான சிறிய படைப்புகளிலும் கலை உயிர்பெறுகிறது. மிக நுணுக்க மான கைவண்ணத்தால் சிறிய அளவில்அசாதாரண படைப்புகளை உருவாக்குப வர்களே மினியேச்சர் கலைஞர்கள். அந்த வகையில் மினியேச்சர் படைப்புகள் உருவாக்கத்தில் அசத்திவருகிறார் சென் னையைச் சேர்ந்த பிரீத்தி இளவரசி வெற்றிபிரியா.
நட்புகளின் வழிகாட்டுதல்
கார், உணவு, பூங்கொத்து போன்ற மினியேச்சர் பொம்மைகளையும் சாக்பீஸ் ஆர்ட், ரெசின் ஆர்ட், மினி கான்வாஸ் பெயின்டிங், எடை குறைவான போன் கேஸ் போன்ற படைப்புகளைக் கைப்பட உருவாக்கி விற்பனை செய்துவருகிறார் பிரீத்தி. ‘ஆர்டிசோல்’ என்கிற பெயரில் ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றை நடத்திவரும் இவர், கல்லூரிப் படிப்பின்போதே இதைத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்.
“ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு படித்தபோது வகுப்பில் விளையாட்டாக சாக்பீஸ் ஆர்ட் ஒன்றைச் செய்துகொண்டிருந்தேன். என் தோழிக்கு அது பிடித்துவிட, அதைப் பணம் தந்து வாங்கிக்கொள்வதாகக் கூறினாள். கிரியேட்டிவ் வேலை என்பதால் இலவசமாக வாங்க மாட்டேன் எனக் கூறிவிட்டாள். வகுப்புத் தோழிகள் அனைவருமே மினியேச்சர் கலைப் படைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கு மாறு எனக்கு ஊக்கம் அளித்தனர்.
கல்லூரி பஜார் திருவிழாவில் ஸ்டால் அமைத்து என்னுடைய படைப்பு களை விற்பனை செய்தேன். தொடர்ந்து ‘ஆர்டிசோல்’ எனும் பெயரில் இன்ஸ்ட கிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி, கமிஷன் முறையில் தேவைப்படும் ஆர்டர்களை எடுத்து விற்பனை செய்துவந்தேன். ‘ஆர்டிசோல்’ எனும் பெயர் வைப்பதற்குக் காரணமும் கல்லூரித் தோழிகள்தான்.
அடுத்து சென்னை சமூகப் பணி கல்லூரியில் சோஷியல் ஆந்த்ரபுரூனர் துறையில் முதுகலை படித்தேன். என்னுடைய பிசினஸை அடுத்தக் கட்டத் துக்கு எடுத்துச் செல்ல இப்படிப்பும் முக்கியக் காரணம்.
கல்லூரிப் படிப்பு ஒரு பக்கம் ஆர்ட் பிசினஸ் இன்னொரு பக்கம் என பிஸியாக இயங்கிக்கொண்டிருந்தேன். முதுகலைப் படிப்பின் முடிவில் கேம்பஸில் தேர்வானதால் ஒரு வருடம் கார்ப்பரேட் பணியில் இருந்தேன். ஆனால், ஆர்ட் தொடர்பான துறைக்கே மனசு என்னை இழுத்துவந்துவிட்டது” என நீண்ட விளக்கம் அளிக்கிறார் பிரீத்தி.
கற்றலும் கற்பித்தலும்
ஆர்வமும் முயற்சியும் இருந்தால்போதும் எந்தத் திறனையும் மெருகேற்றிக் கொள்ளலாம். பிரீத்தியும் அப்படியே. கலை மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்ற முயன்று, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
“நான் சுயமாகவே இந்த மினியேச்சர் படைப்புகளை உருவாக்க கற்றுக்கொண் டேன். எப்படி உரு வாக்குவது, என்னென்ன பொருள்களை வாங்கு வது, எப்படி விற்பனை செய்ய வேண்டும், எவ்வளவு விலை நிர்ணயிக்க வேண்டும், கஸ்டமர் எதிர்பார்ப்பு என ஒவ்வொன்றையும் படிப்படியாகக் கற்றுக்கொண் டேன்.
தொடர் கற்ற லும் அப்டேட்டும் பிசினஸில் அவசியம். 2019ஆம் ஆண்டில் பிசினஸின் தொடக்க நிலையில் நான் மட்டும் தனி ஆளாக அனைத்து வேலைகளையும் நிர்வகித்துவந்தேன். இப்போ இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து வெப்சைட் தொடங்கும் அளவு வளர்ச்சி அடைந்ததில் மகிழ்ச்சி.
சோஷியல் மீடியா, அக்கவுன்ட்ஸ், பார்சல் என ஒவ்வொரு வேலைக்கும் தற்போது துறை நிபுணர்கள் உதவியாக உள்ளனர். எனக்கு கற்றுக்கொள்ளவும் கற்பிக்கவும் ஆர்வம் அதிகம்.
அதனால் மினியேச்சர் ஆர்ட் படைப்புகளை உருவாக்கி விற்பனை செய்வதோடு ஆர்ட் ஒர்க்-ஷாப்களையும் நடத்துகிறேன். கைப்பட ஒரு விஷயத்தை உருவாக்க வேண்டும் என ஆர்வம் உள்ள பலரும் ஒர்க்-ஷாப்பில் கலந்துகொள்கிறார்கள். அது புதுக் கலை அனுபவத்தை ஒருவருக்குக் கண்டிப்பாகத் தரும்” என்கிறார் உறுதியாக.
பொறுமையும் நுணுக்கமும்
பொதுவாக கலைப்படைப்புகளை உருவாக்கும்போது நிதானம் ரொம்ப முக்கியம். மினியேச்சர் படைப்புகளுக்கு அது மிக அதிகமாகவே தேவை.
“பார்ப்பதற்கு அச்சு அசலாக உண்மையானது போன்ற மினியேச்சரை உருவாக்க டீடெயில்களில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
நுணுக்க மான வேலைப்பாடு என்பதால் கண்டிப்பாக அதிக நேரம் தேவைப்படும். வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்ப ‘கஸ்டமைஸ்டு’ ஸ்டைலிலும் கலரிலும் மினியேச்சர் படைப்புகளை உருவாக்கி விற்பனை செய்கிறேன்.
ஒரு பிசினஸில் ரிப்பீட் கஸ்டமர்கள் இருந்தால், அந்த பிசினஸ் சரியாக ஓடிக் கொண்டிருக்கிறது எனலாம். அப்படி ரிப்பீட் கஸ்டமர்களும் ஆர்டிசோலுக்கு இருக்கின்றனர்.
ஒரு கஸ்டமருக்குப் பிடித்துப்போய், இன்னொருவருக்குப் பரிந்துரை செய்வதாலும் பிசினஸ் வளர்ச்சி அடையும். எனக்குப் பிடித்தமான வேலை என்பதால் கார்ப்பரேட்டுக்கு ‘பை’ சொல்லிவிட்டு இதில் முழு நேரமாக இறங்கிவிட்டேன்” எனச் சொல்லி முடிக்கிறார் பிரீத்தி.
‘ஆர்டிசோல்’ இன்ஸ்டகிராம் பக்கம்: https://www.instagram.com/_artisoul__/
- karthiga.rajendran@hindutamil.co.in