டைரியில் எண்ணங்களையும் அனுபவங்களையும் பதிவுசெய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது. வரலாற்றில் அதிகம் வாசிக்கப்பட்ட புனைவற்ற நூல்களில் ஆன் ஃபிராங்கின் டைரிக் குறிப்பும் ஒன்று.
அவருடைய மற்றொரு படைப்பு 'ரகசியப் பதுங்கிடம்' (Tales from the Secret Annex) என்கிற பெயரில் நூலாக வெளியானது. இன்றும் பலர் இலக்குகளைத் திட்டமிடவும் அன்றாட அனுபவங்களை நினைவுக் குறிப்பாகப் பதிவுசெய்யவும் ‘ஜர்னல்’ எழுதும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்களுக்கான ஜர்னல்களை உருவாக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோரான ஹிமானி.
ஜர்னல் ஏன்?
முதுகலை படிப்பு படித்துக் கொண்டி ருக்கும்போதே ‘ஆம்னா’ எனும் ஜர்னல் விற்பனைசெய்யும் தொழிலைத் தொடங்கியுள்ளார் ஹிமானி. ‘ஆம்னா’ வுக்கான பெயர்க் காரணத்தை அவரிடம் கேட்டோம். “சிறு வயது முதலே டைரி எழுதும் பழக்கம் எனக்கு உண்டு.
நிறைய டைரிகளை வாங்கி, எழுதிக் குவித்தி ருக்கிறேன். டைரி எழுதுவது மட்டுமல்லாமல் நான் ஒரு ‘ஓவர் திங்க’ரும்கூட. என்னைப் பாதிக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து நொந்து கொள்வேன். அந்த நேரத்தில் டைரி எழுதினால் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்வேன். என்னைப் போலப் பலரும் இருக்கிறார்கள்.
வழக்கமான ஜர்னல்கள் வண்ண மயமாகவும் ஸ்டிக்கர்கள் அதிகமாகவும் பெரிய அளவிலும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை ஜர்னல் என்பது ஒருவருக்கு மிகவும் பெர்சனலானது.
எங்கு வேண்டுமென்றாலும் கூடவே எடுத்துச்செல்லும் வகையில் எடை குறைவாக எளிமையாக இருக்க வேண்டும் இதனால் என் தேவைக்கு ஏற்ப நானே டிசைன் செய்த ஜர்னல்தான் ‘டியர் ஓவர் திங்கர்’. என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை வைத்து இதை உருவாக்கினேன்.
மூன்று ‘பிராம்ப்ட்’கள் இந்த ஜர்னலின் பக்கங்களில் உள்ளன. உங்களை வருத்தும் விஷயம் என்ன, உங்களைச் சமாதானப்படுத்தும் ஒரு விஷயம் என்ன, இன்றைக்கான நினைவுக் குறிப்பு என்ன என்பது போன்று மூன்று கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
மனம் நிதானமாக இல்லாதபோது ஜர்னலைக் கையில் எடுத்து எழுதத் தொடங்கினால் ஒரு இடைவேளை கிடைக்கும். அந்த இடைவேளை உங்கள் எண்ணத்தை ஆசுவாசப்படுத்த லாம். வெறுமனே திறன் பேசியை ‘ஸ்க்ரால்’ செய்வ தால் பதற்றம் அதி கரிக்குமே தவிர, எனக்கு நிதானத்தைத் தந்த தில்லை.
என்னைப் போல் உள்ள பலருக்கும் இது உதவியாக இருக்கும் என்பதால் ஜர்னல்களை விற்பனை செய்யலாம் எனத் தோன்றியது. இப்படித்தான் ‘ஆம்னா’ ஜர்னல்களை டிசைன் செய்யத் தொடங்கினேன்.
அடுத்த இரண்டும் ‘ஓபன் ஜர்னல்’ வகை. வெள்ளைத் தாள் களும் புள்ளிக்கோடுகள் இடப்பட்ட தாள்களும் இருக்கும். மனதில் உள்ளதை எந்த வரைமுறையும் இல்லாமல் கொட்டித்தீர்க்க இவற்றைப் பயன்படுத்தலாம்.
‘ஆம்னா’ என்றால் உருது மொழி யில் ‘சமாதானம்’ எனப் பொருள். ஜர்னல் தயாரிப்பைத் தொடங்க வேண்டுமெனத் திட்டமிட்டபோது என்ன பெயர் வைக்கலாம் என நண்பர்களோடு நிறைய ஆலோசித்தேன்.
பலரும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கலாமே எனக் கூறினர். ‘Peace’ எனப் பெயர் வைத்தால் நேரடியாக இருக்கும் என்பதால் வேறொரு மொழியில் வைக்க லாம் என்கிற ஐடியா தோன்றியது. அதனால் ‘ஆம்னா’ என்கிற பெயரைத் தேர்வுசெய்தேன்” என நீண்ட விளக்கம் அளிக்கிறார் ஹிமானி.
தனி ஒருவர்
ஜர்னல்களின் உள்ளடக்கத்தைத் தயார்செய்வது, அட்டைப்படம் வடிவமைப்பது, அச்சிடுவது, விற்பனை செய்வதற்கான உத்திகள் என அனைத்து வேலைகளுக்கும் ஹிமானி ஒருவரே பொறுப்பு. எப்படிச் சமாளிக்கிறார்? “இதற்கு முன்பு வேறு சில சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கிறேன்.
ஆனால், பிசினஸ் பார்ட்னரோடு இணைந்து செயல்படுவதில் சில சிக்கல்களை எதிர்கொண்டேன். அந்தக்கசப்பான அனுபவத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், இப்போது நானே தனி ஆளாக அனைத்து வேலைகளையும் செய்கிறேன்.
‘கான்வா’ தளத்தில்தான் என்னுடைய ஜர்னலுக்கான டிசைன், சோஷியல் மீடியா மார்கெட்டிங் செய்வதற்கான உள்ளடக்கம் என அனைத்தையும் டிசைன் செய்கிறேன். தற்போது ஆர்டரின் பேரில் மட்டுமே ஜர்னல்களை அச்சிட்டு விற்பனை செய்துவருகிறேன்.
ஆம்னா இணைய தளத்தில் ஆர்டர் செய்யலாம். அமேசான், ஃபிளிப்கார்ட் தளங்களிலும் ஆர்டர் செய்யலாம். இதுவரை நான்கு வகை ஜர்னல்களை வெளியிட்டிருக்கிறேன்.
ஜர்னலின் தரம் பிடித்துப்போன சிலர் தொடர் வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றனர். அடுத்த கட்டமாக இதை விரிவுப்படுத்தும் திட்டத்தை நோக்கிப் பயணிக்க இருக்கிறேன்” என்கிறார் ஹிமானி.
‘ஆம்னா’ இன்ஸ்டகிராம் பக்கம்: instagram.com/amna.pages/
- karthiga.rajendran@hindutamil.co.in