படம்: குஷி கோத்தாரி, விக்னேஷ்
பள்ளிக்கூடங்களிலும் ‘ஓவியக் கலை’ என்பது பொழுதுபோக்குப் பாடமாகவே கற்பிக்கப்படு கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளுக்கு பதிலாகக் கலை சார்ந்து ஒரு மாணவர் இயங்கப்போகிறார் என்றால் பெற்றோருக்குத் தயக்கம் ஏற்படாமல் இருப்பதில்லை.
ஆனால், ஓவியக் கலையை மையமாகக் கொண்டு சென்னையில் ஒரு ‘ஸ்டுடியோ’வை வெற்றிகரமாக நடத்திவருகிறார் இளம் தொழில்முனைவோர் விக்னேஷ். தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வதற்காக இளம் தலைமுறை இந்த இடத்தை மொய்த்துவருகிறது.
‘ஆர்ட் ஸ்டுடியோ’ என்றால்?
பெரும்பாலான வேலை களைச் செய்வதற்கும் பொழுது போக்கவும் திறன்பேசியை நம்பி இருப்பதால், பல பழைய விஷயங்கள் மெல்லக் காணாமல் போய் விடுகின்றன. புத்தகம் வாசிக்கவும் ஓவியம் வரையவும் செயலிகள் வந்துவிட்ட காரணத்தால், கைப்பட வரையும் பழக்கம் மறைந்துவருகிறது.
என்கிறபோதும், சிறுவயதினர் முதல் பெரியோர்வரை அனைவருக்கும் பெயின்ட் பிரஷ்ஷைக் கையில் எடுக்கும்போது ஏற்படும் புத்துணர்வு பிரத்யேகமானது. அப்படி அனைத்து வயதினரும் ஓவியம் வரை வதற்கான ஓர் இடம்தான் ‘விகிள் ரூம்’. சென்னையில் தி.நகரிலும் பெசன்ட் நகரிலுமாக இரண்டு கிளைகளுடன் இதை நடத்திவருகிறார் விக்னேஷ்.
“சென்னை எழும்பூர் சமூகப்பணிக் கல்லூரியில் முதுகலை சமூகத் தொழில் முனைவு படிப்பைப் படித்தபோது நானும் என் தோழி பிளெஸ்ஸியும் இணைந்து ‘விகிள் ரூம்’ எனும் ஆர்ட் ஸ்டுடியோவைத் தொடங்கினோம்.
இருவருக்கும் ஓவியம் தொடர்பான வேலைகளில் ஈடுபாடு இருந்ததால், ஆர்ட் ஸ்டுடியோவைத் தொடங்கத் திட்டமிட்டோம். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் நியான் ஆர்ட், அக்ரிலிக் கேன்வாஸ் பெயின்டிங், வுட்பிளாக் பெயின்டிங் போன்று புது வகையான ஓவியங்களை உருவாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
அவரவருக்கான ஸ்லாட்டை முன்பதிவு செய்து தனிநபராகவோ குழுவாகவோ வந்து வரையலாம், நீங்கள் உருவாக்கிய ஓவியத்தை நினைவுப்பரிசாக எடுத்தும் செல்லலாம். இதுவே ஆர்ட் ஸ்டுடியோவின் கான்செப்ட்” என்கிறார் அவர்.
விலங்கு மாட்டி ஓவியம்
ஐந்து வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்தச் செயல்பாடுகளில் பங்கேற் கலாம். விகிள் ரூமில் வழங்கப் படும் ‘கஃப் அன்ட் பெயின்ட்’ செயல்பாட்டுக்கு மவுசு அதிகம். “நண்பர்கள், காதலர்கள், கணவன்-மனைவி ஆகியோரை மையமாகக் கொண்டு ‘கஃப் அன்ட் பெயின்ட்’ செயல்பாட்டுக்கான ஐடியாவை உருவாக்கி னோம். இதில் இருவர் பங்கேற்க வேண்டும்.
ஒருவரது வலது கை, இன்னொரு வரது இடது கையை விலங்கைக் கொண்டு பூட்டிவிடுவோம். ஒரு கையால்மட்டுமே வரைய வேண்டும். ஒருவர் இன்னொருவரின் உதவி இல்லாமல் இந்தச் செயல்பாட்டை முழுமையாக நிறைவுசெய்ய முடியாது. இருவருக்கும் இடையேயான உரையாடல், பாண்டிங் ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்தச் செயல்பாட்டின் நோக்கம். ‘கஃப் அன்ட் பெயின்ட்’டுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இது போன்று அவ்வப்போது வரையும் செயல்பாடுகளில் புதுமையைப் புகுத்தினால் மட்டுமே உங்களின் பிசினஸ் நீண்ட நாள் தாக்குப்பிடிக்கும்” என்கிறார் விக்னேஷ். ஒரு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த வாடிக்கையாளரின் விருப்பம், தொழில்நுட்ப மாற்றங்கள், போட்டி, வானிலை, சுற்றுச்சூழல் எனப் பல விஷயங்கள் சார்ந்து செயல்பட வேண்டியது அவசியம். அந்த வரிசையில் ஆர்ட் ஸ்டுடியோவை நிர்வகிப்பதும் விதிவிலக்கல்ல என்கிறார் அவர்.
“இதுவும் ஒரு சீசனல் பிசினஸ்தான். பொதுவாக வாரஇறுதி நாள்களில் கூட்டம் கூடும். ஆனால், தொடர் விடுமுறைகளைக் கொண்ட வார இறுதி எனும்போது கூட்டத்தைக் காண முடியாது.
காதலர் தினம், நண்பர்கள் தினம், மகளிர் தினம் போன்ற கொண்டாட்ட நாள்களில் கூட்டம் இருக்கும். மாத இறுதிகளில் கூட்டத்தைக் காண முடியாது. இப்படி வழக்கமான ஒரு வியாபாரத்தில் இருக்கும் அனைத்துச் சிக்கல்களும் ஆர்ட் ஸ்டுடியோவை நிர்வகிப்பதிலும் உண்டு. அதே நேரத்தில் சீசனுக்கு ஏற்ப ஆர்ட் ஐடியாக்களை அறிமுகம் செய்வதால் வாடிக்கையாளரின் கவனத்தைப் பெற முடிகிறது” என்று விளக்குகிறார்.
சமூக வலைத்தள உதவி
“பிடுபி பிசினஸைவிட பிடுசி பிசினஸ் இன்னும் சவாலானது. ஏனென்றால், நேரடியாக வாடிக்கையாளரோடு உரையாடவும் பழகவும் நேரிடும் என்பதால் வாடிக்கையாளர் திருப்தியில் எந்தக் காரணத்துக்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும்.
வாடிக்கையாளரின் அனுபவம் திருப்திகரமாக அமைவதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் பதிவிடும் கூகுள் ரிவ்யூக்களும் வாய்வழிப் பரிந்துரை களுமே ஆர்ட் ஸ்டுடியோவைத் தொடர்ந்து இயக்க உந்துதலாக அமையும்.
சமூக வலைத்தளத்தின் உதவியோடு புரொமோஷன், என்கேஜ்மென்ட் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் மட்டுமே ஒரு வட்டத்துக்குள் இல்லாமல் பெரிய அளவிலான வாடிக்கையாளர் கூட்டத்தைச் சென்றடைய முடியும்.
கலையால் ஒருவரை ஆசுவாசப்படுத்த முடியும். டிஜிட்டல் உலகைவிட்டுச் சில மணி நேரம் விலகி இருக்க விரும்புவோருக்கு ஆர்ட் ஸ்டுடியோ சரியான மாற்று. முயன்று பாருங்கள்” எனச் சொல்லி முடிக்கிறார் விக்னேஷ்!
விகிள் ரூம் இன்ஸ்டகிராம் பக்கம்: instagram.com/wiggleroom_chennai/
- karthiga.rajendran@hindutamil.co.in