என் மகன் இப்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனைப் பெரிய அறிவியலாளராக உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் ஒரு விவசாயி. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டுங்கள்.
- ராம மணியன், வீரநாராயணபுரம்.
உங்கள் மகனை அறிவியலாளராக உருவாக்க வேண்டும் என்கிற உங்கள் விருப்பம் பாராட்டுக்குரியது. முதலில், உங்கள் மகனுக்கு அறிவியலில் எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதை அறிந்துகொள்வது அவசியம். அவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார் என்பதும் உயர்கல்வியைத் திட்டமிட உதவும்.
அறிவியல் துறையில் இன்று பல் வேறு வாய்ப்புகள் உள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை எனப் பல துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), இயந்திரக் கற்றல் (மெஷின் லேர்னிங், ரோபாட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம், மரபணுப் பொறியியல், தூய்மையான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், குவாண்டம் கணினியியல் போன்ற துறைகளில் தற்போது ஆராய்ச்சிகள் அதிகரித்து வருகின்றன.
மருத்துவத் துறையை எடுத்துக் கொண்டால், பல புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மரபணுக் களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் ஆட்டிசத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து அறிவியலாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். புற்று நோய்க்கு எதிரான புதிய சிகிச்சை முறை களைக் கண்டறிவதிலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
குறிப்பாக, செயற்கைத் தடுப்பூசிகள் (Synthetic Vaccines), ஸ்டெம் செல் சிகிச்சை (Stem Cell Therapy), CAR-T செல் சிகிச்சை (CAR-T Cell Therapy) போன்றவை மருத்துவத் துறையில் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றங்களாக உள்ளன. வயதாவதைத் தாமதப் படுத்துவது, ஆரோக்கியமான ஆயுளை அதிகரிப்பது குறித்தும் (Anti-ageing and Longevity Science) ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
தூய்மையான எரிசக்தித் துறையிலும் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. இந்தியாவில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்களை அறிமுகப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜப்பானில் வழக்கமான சூரியசக்தி பலகைகளுக்கு மாற்றாக, மிக மெல்லிய படலங்களைக் கொண்ட சூரிய மின்சக்தித் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவற்றைச் சுருட்டி எடுத்துச்செல்லும் வகையிலான தொழில்நுட்பங்களும் உருவாகின்றன. ஸ்வீடன் நாட்டில் கழிவைப் பயன் படுத்தி மின்சாரம், வெப்பம் உருவாக்கும் முறைகள் நடைமுறையில் உள்ளன.
இதற்காக, பிற நாடுகளிலிருந்தும் கழிவை இறக்குமதி செய்து மின்சாரம் தயாரிக்கின்றனர். இவ்வாறு, ஒரு நாட்டின் கழிவுகள்கூட மற்றொரு நாட்டின் எரிசக்தி ஆதாரமாக மாறுகின்றன.
வேளாண்மைத் துறையிலும் பல புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பயிர்களைத் தாக்கும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்ட ரகங்களை உருவாக்குவது, குறைந்த அளவு நீரிலும் வளரக்கூடிய பயிர்களை உருவாக்குவது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், தாவரங்களில் இருந்து இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் முயற்சி களும் நடைபெறுகின்றன.
தாவர அடிப்படையிலான இறைச்சி மாற்றுப் பொருள்கள் (Plant-based Meat Alternatives) இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் புதிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஞெகிழிக் கழிவுகள், நுண்ஞெகிழித் துகள்களைச் சிதைத்து அகற்றுவதற்கான புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறியும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இங்கு குறிப்பிட்டிருப்பவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. எனவே, உங்கள் மகன் பல்வேறு அறிவியல் துறைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, தனக்கு மிகவும் ஆர்வமுள்ள துறையைத் தேர்ந்தெடுக்க உதவுங்கள்.
அந்தத் துறையில் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், படிப்புகள் ஆகியவற்றை அறிந்துகொண்டு தெளிவான இலக்கை நிர்ணயிக்கச் சொல்லுங்கள். அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிக்க ஊக்கமளியுங்கள்.