கல்வி - வேலை வழிகாட்டி

வேலை தரும் துணை மருத்துவப் படிப்பு

Guest Author

மருத்துவச் சேவைக்காக மருத்துவ கவுன்சில் இருப்பதுபோல, மருத்துவர் களுக்குத் துணையாகச் செயல்படும் துணை மருத்துவத் துறைகளுக்கு எனத் தேசிய துணை சுகாதாரத் தொழில்கள் ஆணையச் சட்டம் 2021ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இச்சட்டம், மருத்துவ ஆய்வக அறிவியலை முக்கியமான நோயறிதல் துறைகளில் ஒன்றாக அங்கீகரிப்பதுடன் பல்வேறு சிறப்புச் சுகாதாரத் தொழில்களையும் அங்கீகரிக்கிறது.

சங்கரா நேத்ராலயாவில் படிப்பு “மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் என்பது மருத்துவர்களுக்கே ஒரு நோயை அடையாளம் காட்ட உதவும் முக்கியத் துறை” என்கிறார் சங்கர நேத்ராலயா அகாடமியின் மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் கல்வித் துறைத் தலைவர் - இணைப் பேராசிரியர் வந்தனா.

“இந்தத் துறையில் படிப்புகளைப் பல்வேறு நிலைகளாக விவரிக்கலாம். நான்கு ஆண்டு மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் பட்டப்படிப்பில் (Bachelor of Medical Lab Science) மருத்துவ ஆய்வக அறிவியல் வல்லுநர்கள் நுண்ணுயிரியல், உயிர்வேதியியல், ரத்தவியல், திசுநோயியல், நோயெதிர்ப் பியல், மூலக்கூறு நோயறிதல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பு நிலையில் பயிற்சி பெறுகிறார்கள். எனவே, பட்டம் பெற்றவுடன் உடனடியாக மருத்துவமனை ஆய்வுக்கூடங்களில் பணியில் சேர முடியும்.

பட்டப்படிப்பு முடித்த பிறகு, மேலும் சிறப்புத்திறன் பெற மருத்துவ ஆய்வுக்கூட அறிவியல் முதுநிலைப் பட்டப்படிப்பு (Masters of Medical Lab Science) படிக்கலாம். அதற்கும் மேலாக, இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று அறிவியலறிஞர்களாகவும் உயர முடியும்” என்றார்.

கல்வித் தகுதி

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 60% சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் சங்கர நேத்ராலயா அகாடமியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். கல்வித்தரத்தை முன்னிட்டு 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்திப் பட்டம் வழங்குகிறது. இப்படிப்பின் முதல் மூன்று ஆண்டுகளில் வகுப்பறை, ஆய்வுக்கூடப் பயிற்சி வகுப்புகளும், நான்காம் ஆண்டில் சென்னையின் பிரபல மருத்துவ மனைகளில் ஓராண்டு பணியிடப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

தகுதியுள்ள மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு விடுதி வசதியும் கல்லூரி வளாகத்திலேயே உண்டு. நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு - https://www.thesnacademy.ac.in

- கட்டுரையாளர், அ.போ.இருங்கோவேள், மேலாளர் – மருத்துவ சமூகவியல், சங்கரா நேத்ராலயா, சென்னை.

SCROLL FOR NEXT