நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் - இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ONGC) அறக்கட்டளை சார்பில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'ஓ.என்.ஜி.சி. மெரிட் கல்வி உதவித்தொகை' வழங்கப்படுகிறது. 2026–27ஆம் கல்வியாண்டுக்கான உதவித்தொகைக்காகத் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவித்தொகை விவரம்:
இந்தத் திட்டத்தின்கீழ் பட்டியல் சாதி, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு என மூன்று பிரிவுகளில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 2,000 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட உள்ளன. இதில் 50 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்குமான தகுதி, விண்ணப்ப விவரங்களை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் (www.ongcscholar.org) தெரிந்துகொள்ளலாம்.
பட்டியல் சாதி, பழங்குடியினர் பிரிவு உதவித் தொகையைப் பற்றி மட்டும் விரிவாகப் பார்க்கலாம். இப்பிரிவைச் சேர்ந்த தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.48,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்தப் பிரிவுக்கான உதவித்தொகைகள் நாடு முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 200 பேர் என ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தெற்கு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.
தகுதி:
பொறியியல், எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் அல்லது நிலத்தியல், புவி இயற்பியல் (Geology/Geophysics) ஆகிய துறைகளில் முதுகலைப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
பொறியியல், எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60% எம்.பி.ஏ., நிலத்தியல், புவி இயற்பியல் முதுநிலை மாணவர்கள் இளங்கலைப் படிப்பில் குறைந்த பட்சம் 60% அல்லது 10க்கு 6.0 சிஜிபிஏ பெற்றிருக்க வேண்டும்.
பட்டியல் சாதி, பழங்குடியினர் பிரிவில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 2026 ஆகஸ்ட் 1ஆம் தேதியின்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தளத்தில் (National Scholarship Portal) ‘One time registration' பதிவை நிறைவு செய்திருக்க வேண்டும். கேட்கப் பட்டிருக்கும் ஆவணங்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதித் தேர்வில் மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் உதவித் தொகைக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
உதவித்தொகை வழங்கும் முறை:
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வியாண்டு நிறைவடைந்த பின்னர், இந்தத் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். அடுத்த கல்வி யாண்டுக்குத் தேர்ச்சி பெற்றால், படிப்பு முடியும்வரை உதவித்தொகையைத் தொடரலாம். இதற்காக ஒவ்வோர் ஆண்டும் இணையவழியில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:
நவம்பர் 30க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.ongcscholar.org