ஒரு மலை எப்படித் தோன்றியது? நிலத்தடி நீர் எங்கே செல்கிறது? ஒரு புயல் ஏன் உருவாகிறது? காலநிலை மாற்றம் பூமியை எப்படி மாற்றுகிறது? இவை ஒவ்வொன்றும் தனித்தனி கேள்வி களாகத் தோன்றலாம்.
ஆனால், இவற்றை ஒன்றோடு மற்றொன்றை இணைத்துப் புரிந்துகொள்ளும் ஒரு பெரிய அறிவியல் துறை இருக்கிறது. அதுதான் Earth, Atmospheric and Planetary Sciences (EAPS) - புவி, வளிமண்டலம், கோள் அறிவியல் துறை.
பூமியின் ஆழம் முதல் விண்வெளி வரை பல விஷயங்களைப் பற்றி இதில் படிக்கலாம். இந்தப் படிப்பைப் பற்றி விரிவாகப் புரிந்துகொள்ள, இதில் உள்ள 7 முக்கியப் பகுதிகளைப் பார்க்கலாம்.
இயற்கை வளங்கள்
நாம் பயன்படுத்தும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? நிலத்தடியில் இருக்கும் கனிம வளங்களை எப்படிக் கண்டறிவது? எதிர்காலத்துக்குத் தேவையான ஆற்றல் வளங்களை எப்படிப் பாதுகாப்பது? நிலத்தடி நீர், கனிமங்கள், புவிவெப்ப ஆற்றல், கார்பன் சேமிப்பு உள்ளிட்டவை இந்தப் பிரிவில் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதிகரித்துவரும் நீர்த் தேவை, புதிய ஆற்றல் வளங்களுக்கான தேவை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த அறிவியல் உதவுகிறது.
நிலப்பரப்பு
மலைகள் எப்படி உருவாகின்றன? ஆறுகள் நிலத்தை எவ்வாறு மாற்று கின்றன? பூமியின் ஆழத்தில் என்ன நடக்கிறது? பாறைகள், மண், மலைகள்,
ஆறுகள், நிலப்பரப்பு மாற்றங்கள் உள்ளிட்டவற்றை இந்தப் பிரிவு ஆராய்கிறது. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிதல் முதல் பெரிய கட்டுமானங்களுக்கான நிலத்தின் தன்மையைப் புரிந்துகொள்வதுவரை இதன் பயன்பாடு உள்ளது.
உயிரினங்களும் சூழல்களும்
பூமியில் உயிர்கள் எப்படித் தோன்றின? சூழலியல் மாறும்போது உயிரி னங்கள் எப்படி மாறுகின்றன? கடலி லும் தீவிரமான சூழல்களிலும் உயிர்
கள் எவ்வாறு வாழ்கின்றன? நுண்ணு யிரிகள், புதைபடிவங்கள், பழங்கால உயிரினங்களின் வரலாறு போன்றவை இதில் உள்ளன.
இயற்கைப் பேரிடர்கள்
நிலநடுக்கம், புயல், வெள்ளம், மலைச்சரிவு, காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களை முற்றிலும் தடுக்க முடி யாது. ஆனால், அவை எப்போது, எங்கு, எப்படி ஏற்படக்கூடும் என்ப தைப் புரிந்துகொள்வது பாதிப்பைக் குறைக்க உதவும்.
அதற்காக நிலநடுக் கங்கள், தீவிர வானிலை மாற்றம், வெள்ளம், கடல் மட்ட உயர்வு, எரிமலைகள் உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்யப் படுகிறது.
பூமியின் ஆரோக்கியம்
நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து கடலில் சேரும் பிளாஸ்டிக் வரை, மனிதச் செயல்பாடுகள் பூமியின் பல்வேறு அமைப்புகளைப் பாதிக்கின்றன.
காற்று மாசு, பசுங்குடில் வாயுக்கள், கடல் மாசு, ஓசோன் படலத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை ஆராய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான அறிவியல் அடிப்படையி லான தீர்வுகளை உருவாக்க முடியும்.
காலநிலை
வெயில், மழை, புயல் என நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் வானிலை நிகழ்வுகளுக்குப் பின்னால் மிகப் பெரிய காலநிலை அமைப்பு இயங்குகிறது.
வளிமண்டலம், கடல்கள், பனிப்பாறைகள், கார்பன் சுழற்சி, கடந்த காலக் காலநிலை மாற்றங்கள் ஆகிய வற்றை இணைத்து இந்தப் பிரிவு ஆராய்கிறது. எதிர்காலக் காலநிலை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க உதவும் ’கிளைமேட் மாடல்’ இதில் முக்கியமானது.
கோள்களும் விண்வெளியும்
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள், தொலைதூரக் கோள்கள், அவற்றின் உருவாக்கம், காந்தப்புலம், வளிமண்டலம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக, வேறு கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்கிற கேள்வியும் இத்துறையின் முக்கியமான ஆய்வுப் பகுதியாக உள்ளது.
பூமியின் ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றம் மற்றொரு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, அவற்றை ஒன்றோடு மற்றொன்றைத் தொடர்பு படுத்திப் பார்ப்பதே EAPSஇன் சிறப்பு.
அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற எம்.ஐ.டியில் இளங்கலை மாண வர்கள் இப்படிப்பைப் படிக்கி றார்கள். எம்.ஐ.டி போன்றதொரு முக்கியத்துவம் இந்தியாவில் இப்படிப்புக்கு ஏன் இன்னும் கிடைக்கவில்லை என்பதையும், மாற்றுப் படிப்புகள் இருக்கின்றனவா என்பதையும் பற்றி அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org