கல்வி - வேலை வழிகாட்டி

அறிவியல் ஆர்வலர்களுக்கான புதுக் களம்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 16

நெடுஞ்செழியன்.தா

‘பயோஜியோகிரபி' அல்லது உயிர்ப் புவியியல் துறை என்பது ஒரு பாடப்புத்தகம் சார்ந்தது மட்டுமல்ல. அது பூமியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அறிவியல். காலநிலை மாற்றம் உச்சக்கட்டத்தை நெருங்கும் இன்று, உயிர்ப் புவியியல் நிபுணர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துவருகிறது.

இயற்கையின் மீது ஆழமான காதலும், அறிவியலில் தீவிர ஆர்வமும், தொழில்நுட்ப அறிவும் கொண்ட மாணவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. உலகைக் காக்கவும், அதே வேளை உலகை வலம்வரவும் விரும்பும் இளைய தலைமுறைக்கு இது சிவப்புக் கம்பள வரவேற்பை அளிக்கிறது.

          

இந்தியாவில் உயிர்ப் புவியியல்: உயிர்ப் புவியியல் பாடம், தனிப் பட்ட இளங்கலைப் படிப்பாக (B.Sc. Biogeography) அரிதாகவே இந்தியாவில் வழங்கப்படுகிறது. இது பெரும்பாலும் புவியியல், விலங்கியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல் அல்லது சூழலியல் படிப்புகளின் ஒரு முக்கியப் பகுதி யாகவே உள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS), டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவை இத்துறை சார்ந்து இந்தியாவில் இயங்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள்.

உலகத் தரம் பரிணாம உயிரியல், சுற்றுச்சூழல் ஆய்வுகளின் மெக்காவாகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இப்படிப்பைப் படிக்க நேர்ந்தால், உலகில் சிறந்த அறிவியலாளர்களோடு பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கலாம்.

மரபணு அடிப்படையிலான பைலோஜியோகிரபி ஆய்வுகளுக்கு (Phylogeography), பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் மிகச் சிறந்தது. சூழலியல், சுற்றுச்சூழல் அறிவியலில் (School of the Environment) கவனம் செலுத்த யேல் பல்கலைக்கழகம் சிறந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள ‘Biodiversity, Conservation and Management' துறை உலகத் தரம் வாய்ந்தது.

விலங்கியல், வளம்பேணும் உயிரியல் (Conservation Biology) ஆய்வுகளைப் படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சிறந்தது. தொழில் நுட்பம், சுற்றுச்சூழலை இணைக்கும் ஐரோப்பாவின் முதன்மை நிறுவனமாக இருப்பது ஈடிஎச் ஜூரிச், சுவிட்சர்லாந்து (ETH Zurich). கடல் வாழ் உயிரினங்கள், பவளத் திட்டுகள் சார்ந்த ஆய்வுகளுக்கு ஆஸ்தி ரேலியத் தேசியப் பல்கலைக் கழகம், உலகின் தலைசிறந்த இடங்களில் ஒன்றாகும்.

வேலைவாய்ப்புகள்: உலகம் முழுவதும் இத்துறை யில் நிபுணர்களுக்குத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஐக்கியநாடுகள் அவையின் சுற்றுச்சூழல்திட்டம் (UNEP), உலக இயற்கை நிதியம் (WWF), பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) போன்ற சர்வதேச அமைப்புகளில் திட்ட விஞ்ஞானியாகவும், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில் நுட்ப நிறுவனங்களில் ‘GIS’ பகுப்பாய்வாளராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சுற்றுச்சூழல் ஆலோசகராகவும், ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் ‘Biosecurity’ அதிகாரியாகவும், வனவிலங்கு ஆய்வாள ராகவும், காலநிலை மாற்ற ஆய்வாள ராகவும் பணியாற்றலாம்.

செயற்கை நுண்ணறிவுத் (ஏ.ஐ) தொழில்நுட்பம் மூலம் உயிரினப் பரவல் கணிப்பு, விண்வெளித் தொழில்நுட்பம் மூலம் நிகழ் நேரக் கண்காணிப்பு, மரபணுத் தொழில் நுட்பம் மூலம் அழிந்த உயிரினங்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் போன்று புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

சுவாரசியமான அம்சங்கள்:

வாலஸ் கோடு: பயோ ஜியோகிரபியின் தந்தை ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ், இந்தோனேசியாவில் ஆசிய, ஆஸ்திரேலிய உயிரினங்களைப் பிரிக்கும் ஒரு கற்பனைக் கோட்டைக் கண்டறிந்தார். வாலஸ் கோடு (Wallace Line) - ஒரு கற்பனைக் கோடு. அதேநேரம் உண்மையான அறிவியல். இது கண்டத் தட்டுகளின் மோதலின் விளைவாக உருவான ஒரு புவியியல் எல்லை.

இந்தோனேசியத் தீவுகளில் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்தபோது, ஒரு கற்பனைக் கோட்டுக்கு மேற்குப் பக்கம் உள்ள உயிரினங்கள் ஆசிய வகையைச் சார்ந்ததாகவும், கிழக்குப் பக்கம் உள்ளவை ஆஸ்திரேலிய வகையைச் சார்ந்ததாகவும் இருப்பதை அவர் கண்டறிந்தார்.

இந்தியா - மிதக்கும் கண்டம்: இந்தியா ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவுடன் இணைந்திருந்தது. பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் மோதியதால்தான் இமயமலை உருவானது. இதனால்தான் இந்தியாவில் ஆப்ரிக்க வகை உயிரினங்களும், ஆசிய வகை உயிரினங்களும் கலந்து காணப்படுகின்றன.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

SCROLL FOR NEXT